Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

கூட்டணி குறித்து ஆரூடம் சொல்ல முடியாது: ஞானதேசிகன் பேட்டி

‘கூட்டணி குறித்து இப்போது ஆரூடம் சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்யப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் 129-ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் சேவா தள காங்கிரஸார் வெள்ளை சீருடை அணிந்து அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக 20 அம்ச திட்டங்களை, மத்திய காங்கிரஸ் அரசு அமல்படுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்க்க, ஜனவரியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

தனது முந்தைய காலங்கள் குறித்து, நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருப்பது, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படும் நாடகமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி சேரும் என இப்போது ஆரூடம் சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x