Published : 31 Jul 2016 03:24 PM
Last Updated : 31 Jul 2016 03:24 PM
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில், இளம் குற்றவாளியை ரூ.10 ஆயிரத்துக்கு தப்பிக்க விட்டதாக வார்டன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட இளம் குற்றவாளிகள் உள்ளனர். இங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்ராஜ் என்ற இளம் குற்றவாளி தப்பித்துள்ளார். . அவரை கண்டுபிடித்த அரியாங்குப்பம் போலீஸார் மீண்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த நிலையில் மீண்டும் சரத்ராஜ் தப்பியோடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரைத் தேடி வந்த நிலையில், லாஸ்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள், லேப்-டாப் ஆகியவற்றை திருடிய வழக்கில் சரத்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீஸார் லாஸ்பேட்டை வந்து, சரத்ராஜிடம் விசாரித்த போது ரூ.10 ஆயிரம் பணத்துக்காக வார்டன் ராஜவேலு தப்பிக்க விட்டதாகவும், அவருக்கு பணம் கொடுப்பதற்காக திருட்டு வேலையில் இறங்கியதாக அதிர்ச்சி தகவலை அளித்தார்.
இந்த தகவலை அறிந்த சிறார் நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரியாங்குப்பம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த இளம் குற்றவாளியை தப்ப விட்ட வார்டன் ராஜவேலு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன், சமையல்காரர் சுரேஷ், காவலாளி குப்புசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்பு அவர்களை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி விட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT