Published : 13 May 2017 01:41 PM
Last Updated : 13 May 2017 01:41 PM

காட்டு யானைகளுக்கு உப்புக்கட்டி வைத்தபோது பதுங்கி வந்த புலி: வனத்துறையினர் கண் எதிரே நின்று நிதானித்து நீர் அருந்திச் சென்ற அபூர்வக் காட்சி

காட்டு யானைகளுக்கு அடர்ந்த வனப்பகுதிகளில் உப்புக்கட்டிகள் வைக்கச் சென்ற போது எதேச்சையாக பதுங்கிப் பதுங்கி வந்த புலியைப் பார்த்து அதிர்ந்து போயினர் வனத்துறையினர். அவர்கள் அசையாது திக் பிரமையற்று நிற்க, சாவகாசமாக அவர்களை கண்டும் காணாததுபோல் குட்டையில் நீர் அருந்திவிட்டு யாரையும் தாக்காமல் திரும்பிச் சென்றது புலி. இந்த அபூர்வ நிகழ்வை சுவாரஸ்யம் ததும்பப் பேசி வருகின்றனர் மேட்டுப்பாளையம் வனத்துறையினர்.

கடந்த சில ஆண்டுகளாக பொய்த்துப் போன பருவமழை காரணமாக கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச் சரகங்களில் கடும் வறட்சி நிலவி வருகின்றது. வன விலங்குகளின் நீராதாரங்கள் அனைத்தும் கடும் வெப்பம் காரணமாக வற்றி வருகிறது. இதனால் இங்குள்ள வன எல்லையோரங்களில் தண்ணீர் தொட்டிகளை கட்டி நாள்தோறும் காட்டு மிருகங்களுக்காக தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர் வனத்துறையினர்.

மேலும் வறட்சியால் போதிய தீவனமின்றி உடல் மெலிந்து காணப்படும் காட்டு யானைகள் எளிதில் வயிற்றுப்போக்கு, ஆந்திராக்ஸ் போன்ற நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி இறந்து வருகிறது. அதைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு வலு சேர்க்கும் வைட்டமின்கள் அடங்கிய உப்புக்கட்டிகளையும் குறிப்பிட்ட நீராதாரங்கள் அருகே வைத்து வருகின்றனர்.

( உப்புக்கட்டிகள் வைக்கும் வனத்துறையினர்.)

இதன்படி நேற்று மாலை ஆறு மணியளவில் சிறுமுகை வனத்துறையினர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி அருகே யானைகள் உண்ண உப்புக்கட்டிகளை வைத்துக் கொண்டிருந்தனர். அதை படம் பிடித்து செய்தி வெளியிட செய்தியாளர்களும் சென்றிருந்தனர். அப்போது இவர்கள் நிற்கும் இடத்தில இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் புலியொன்று பதுங்கியபடி வந்தது. இதனால் கலங்கிப்போன வனத்துறையினர் ஆங்காங்கே அமைதியாக நின்று விட்டனர். அவர்களுடன் சென்ற செய்தியாளர்களும் கூட செய்வதறியாது உறைந்து போய் நின்று விட்டனர்.

என்றாலும் இங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்தபடி மெல்ல மெல்ல பதுங்கினது போல் நடந்து வந்த அப் புலி அங்குள்ள ஒரு பள்ளத்தில் சிறிதளவு தேங்கி நின்ற தண்ணீரை நின்று நிதானமாகப் பருகியது. அப்போதும் அதன் பார்வை இவர்கள் மீதே இருந்திருக்கிறது. எனினும் சில நிமிடங்கள் நீர் அருந்திய புலி பிறகு யாரையும் தாக்க முயற்சிக்காமல் திரும்பி அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் எந்த அசம்பாவிதமும் நேராமல் அனைவரும் தப்பித்து பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.

பொதுவாக மிகவும் சென்சிடிவான அபூர்வ விலங்கு புலி. அடர்ந்த காட்டுக்குள் மட்டுமே நடமாடும். மனித அரவம் கண்டாலே கிலோ மீட்டர் தூரத்தில் பதுங்கிக் கொள்ளும். அப்படிப்பட்ட சென்சிடிவ் விலங்கு அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து வெளியேறி, கோத்தகிரி செல்லும் முக்கிய சாலையோரமுள்ள வன எல்லையோரத்திற்கு வந்ததோடு, மனிதர்கள் நிற்பதை அறிந்தும் கூட அங்கு தேங்கி நின்ற சிறிதளவு தண்ணீரைப் புலி அருந்தி விட்டு செல்வது என்பது அதிசயத்திலும் அதிசயமான நிகழ்வு என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். அதற்குக் காரணம் வனத்தினுள் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறைதான். மிகுந்த தாகம் இருந்தால் ஒழிய அது தன் ஆபத்தையும் சட்டை செய்யாமல் இப்படி வந்து நீர் அருந்தி செல்வது நடைபெறாது என்கின்றனர்.

மேட்டுப்பாளையம் நகரத்தின் மிக அருகே தொடர்ச்சியாக வாகனங்கள் கடந்து செல்லும் சாலையோர புதர்க்காட்டில் தற்போது புலிகள் நடமாடுவதை அறிந்து இன்னொரு பக்கம் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். தாகம் தீர்க்க வந்த புலி, இரை கிடைக்காமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தால் என்ன ஆகும் என்ற பீதியும் மக்களிடையே வலம் வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் புலிகளின் உணவான மான்கள் மற்றும் காட்டெருதுகளின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே புலி போன்ற ஊண் உண்ணிகள் காட்டை விட்டு வெளியேறுவதும், ஊருக்குள் நுழைவதும் சாத்தியமேயில்லை. பொதுமக்கள் அச்சம் தேவையற்றது. இருப்பினும் புலி மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்!'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x