Published : 09 Jan 2014 12:11 PM
Last Updated : 09 Jan 2014 12:11 PM

மாநிலப் பாடத் திட்டம்: ராமதாஸ் அறிக்கை

ஐ. ஐ. டி போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில், மாநிலவாரியாக இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

"2013-14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக பாடத்திட்ட(State Board)மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்த கவலையளிக்கிறது.

ஐ.ஐ.டி.க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 20 ஆயிரம் பேரில் 11,693 பேர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 3538 பேரும், ராஜஸ்தான் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 1376 பேரும், மராட்டிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 1210 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், கல்வியில் வளர்ச்சி அடைந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வியில் பின்தங்கியவையாக கருதப்படும் பிகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒதிஷா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநில பாடத்திட்டங்களின் மாணவர்கள் கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கின்றனர். சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ள 828 மாணவர்களில் 1% கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை என்பது தமிழ்நாட்டை மாறி,மாறி ஆட்சி செய்து வருபவர்கள் வெட்கப்பட வேண்டிய விசயமாகும்.

அதிக மதிப்பெண் எடுப்பவரே சிறந்த மாணவர் என்ற தவறான முன்னுதாரணம் தமிழகத்தில் ஏற்படுத்தப் பட்டிருப்பதே இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெருமளவிலான தனியார் பள்ளிகள் பாடங்களை படித்து ஒப்புவிக்கும் மனப்பாட எந்திரங்களாக மட்டுமே மாணவர்களை உருவாக்கி வருகின்றன என்பது வருத்தமளிக்கும் உண்மை ஆகும். மாவட்ட, மாநில அளவில் முன்னணி இடங்களை பிடித்த மாணவர்களால், சாதாரண பொது அறிவு வினாக்களுக்குக் கூட விடையளிக்க முடிவதில்லை என்பதே நமது கல்வியின் தரம் என்ன? என்பதை வெளிப்படுத்திவிடும்.

ஆந்திராவில் 11, 12 ஆகிய இரு வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களுமே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் சிறப்புப் பயிற்சி இல்லாமலேயே நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு மிகவும் அவசியமான 11 ஆம் வகுப்பில், அவ்வகுப்புக்கான பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நடுவண் இடைநிலை கல்வி வாரியத்திற்கு இணையான பாடத்திட்டமே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும்; அது தான் உண்மையான சமச்சீர்க் கல்வித் திட்டமாக இருக்கும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கையை கடைபிடிக்காமல், தனியார் பள்ளிகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலை மாறும் வரை ஐ.ஐ.டி.க்களில் சேருவது என்பது தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும்.

தமிழக மாணவர்களின் நலனில் ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், நடுவன் இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, ஆந்திரா, ராஜஸ்தான் மாநில பாடத்திட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன? என்பதை நமது கல்வியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து அவற்றையும் நமது கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இன்னொருபுறம் சமூகநீதி கோட்பாடுகளின்படி, ஐ.ஐ.டி.க்களில் தமிழக மாணவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய, ஐ.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலவாரி இட ஒதுக்கீடு வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x