Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹர், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் பதவிக்காக போராடிய நிலையில், அதற்கு சிக்கல் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக பதிவாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காரைக்குடி அழகப்பா, திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழங்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் மருத்துவம் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் மாதக் கணக்கில் காலியாக உள்ளன. இந்தப் பதவிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை அமரவைக்க அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்காக பேரங்களும் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, தகுதியில்லாத நபர்களை துணைவேந்தர் பதவிகளில் நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும் அதை தடுத்து நிறுத்தவும் கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFUFA) ஒருங்கிணைப்பாளருமான கிருஷ்ணசுவாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தடைபட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் மகன் டேவிட் ஜவஹரை துணைவேந்தராக கொண்டுவருவதற்கு ஆட்சி மேலிடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கப்படுபவர்கள், பத்தாண்டுகளுக்கு குறையாமல் பேராசிரியர்களாக பணியாற்றிய தகுதி இருக்க வேண்டும் என்பது யுஜிசி விதி. கிருஷ்ணசுவாமி தனது வழக்கில் இந்த விதியும் மீறப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டேவிட் ஜவஹருக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை துணைவேந்தராக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கடந்த வாரம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமனம் செய்திருக்கிறார்கள்.
‘பாரதப் பிரதமராக வருவதற்கு ஜெயலலிதாவுக்கு அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது’என அண்மையில் பகிரங்கமாக தெரிவித்தார் தா.பாண்டியன். இந்நிலையில், டேவிட் ஜவஹர் நியமன விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் அறிய தா.பாண்டியனை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT