Published : 26 Aug 2016 11:39 AM
Last Updated : 26 Aug 2016 11:39 AM
கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு என புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாததால் சுற்றுலா வளர்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளது.
‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் பிரசித்தி பெற்றது. தற்போது 12 மைல் ரோடு என்ற சுற்றுப்பாதையில் உள்ள மோயர் பாய்ண்ட், குணா குகை, பைன்பாரஸ்ட், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு பிரையண்ட் பூங்காவில் ஓய்வு என்ற நிலையே சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது. சுற்றுலா பயணிகள் ஈடுபாட்டுடன் பொழுதுபோக்கு என்றால் அது படகுசவாரி மட்டுமே.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிக ளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரித்தால் மேலும் சுற்றுலா பயணிகளை கவரலாம். அதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும், நகராட்சியின் நிதிநிலைமையும் சீராகும். ஆனால் சுற்றுலா வளர்ச்சிக்கென கொடைக்கானலுக்கு என கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்து ஏட்டளவிலேயே உள்ளன. இத்திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், இங்கு உள்ள அதிகாரிகளும் அக்கரை எடுத்து கொண்டதாக தெரியவில்லை. காரணம் அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கொடைக்கானல் நகராட்சி அலுவலக பகுதியில் இருந்து ஜிம்கானா மைதானம் வரை ஏரியின் மேல்பகுதியில் ரோப்கார் அமைக்கும் திட்டம் தயாராக உள்ளது. ‘பூட்’(பில்ட், ஆபரேட் அன்டு டிரான்ஸ்பர்) முறையில் தனியாரிடம் இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்தி அவர்கள் தனியார் முதலீட்டுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை எடுத்த பிறகு அரசிடம் ஒப்படைப்பது என்ற முறையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த திட்டம் உள்ளது. ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. மேலும் கொடைக்கானலில் ரோஜாத் தோட்டம் அமைக்கும் திட்டமும் கிடப்பில்தான் உள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் உள்ள தெப்பத்தில் இசை நடன நீரூற்று அமைக்கப்பட்டது. இது சில மாதங்களே செயல்பட்டு தற்போது செயல்படாமல் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்தம் என்பது கொடைக்கானலில் பெரிய போராட்டமாகவே உள்ளது. அடுக்குமாடி வாகன நிறுத்தம் என்பது கொடைக்கானலில் செயல்படுத்தவேண்டியது மிகமுக்கியம். ஆனால் இது பற்றி எந்த திட்டத்தையும் செயல்படுத்த முன்வரவில்லை. இருக்கும் ஒரு சில வாகன நிறுத்த இடங்களிலும் கடையை கட்டி ஆக்கிரமிப்பு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை தரும்நிலையில் தான் நகராட்சி நிர்வாகமும் உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டு சொல்லம்படி கொடைக்கானலுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்காதது இங்குவரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அலுவலர் ஒருவர் கூறியது: கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக்கென அரசுக்கு பல திட்டங்கள் அனுப்பியுள்ளோம். அரசின் பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் பெறப்பட்டு, நிதி பெறப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT