Last Updated : 16 Jan, 2014 12:00 AM

 

Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யப்போகும் மேல்சபை தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் காலியாகவுள்ள 6 நாடாளுமன்ற மேல்-சபை பதவிகளுக்கு பிப்ரவரி மாதம் 7-ம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களவை தேர்தலுக்காக, அரசியல் கட்சிகளுக்கிடையே அமையவுள்ள கூட்டணியே, பொதுத் தேர்தலுக்கும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2013 மேல் சபை தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்றத்தின் மேல் சபை தேர்தல் பெரும் பரபரப்புக்கிடையே கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி நடந்தது. அப்போது, தமிழகத்தில் காலியாக இருந்த 6 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தைப் பொருத்து, அதிமுக-வுக்கு 5 இடங்கள் கிடைப்பது உறுதியாக இருந்தது. ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைப் பெறுவதற்கு தமிழகத்தில் 34 வாக்குகள் தேவை என்பதால்,தி.மு.க-வும், தே.மு.தி.க-வும் தனித்து வெற்றி பெற முடியாது என்ற நிலையும் இருந்தது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பே, இலங்கை பிரச்சினையை முன்னிறுத்தி தனது நீண்ட நாள் தோழமைக் கட்சியான காங்கிரஸுடனான உறவை தி.மு.க முறித்துக் கொண்டது. ஆனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு, தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் கட்சி அப்போது முன்வந்தது.

தே.மு.தி.க ஆதரவு கேட்டிருந்த போதிலும் கடைசி நேரத்தில் தி.மு.க-வுக்கு காங்கிரஸ் கை கொடுத்ததால், தி.மு.க தலைவரின் மகள் கனிமொழி, தனது எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

6-வது சீட் யாருக்கு…..

அ.தி.மு.கவும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டும் (டி.ராஜா 2-வது முறை) 5 இடங்களில் போட்டியிட்டன. ஆறாவது இடத்துக்கு தே.மு.தி.க மற்றும் தி.மு.க-வுக்கு இடையே மட்டும் போட்டி நிலவியது, இதில் தி.மு.க வெற்றி பெற்றது.

இந்தநிலையில் தற்போது, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை, காங்கிரஸில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தி.மு.க-வில் ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டேன்லி, அ.தி.மு.க-வின் நா.பாலகங்கா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் ஆகியோரின் 6 ஆண்டு பதவிக்காலம் ஏப்ரலில் முடிகிறது.

மேற்கண்ட 6 காலியிடங்களில் அதிமுக கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், 6-வது சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

விட்டதைப் பிடிக்க…..

இந்த 6-வது இடத்துக்கு ஜி.கே. வாசன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், கடந்த தேர்தலில் விட்டதைப் பிடிக்க தே.மு.தி.க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்கட்சி தனது முதல் நாடாளுமன்ற உறுப்பினரை டெல்லிக்கு அனுப்பிட தீவிரமாய் உள்ளது.

இருப்பினும், கடந்த ஜூனில் நிலவிய அரசியல் நிலவரம் மாறி இப்போது தேர்தல் ஜூரம் கட்சிகளை பிடித்துள்ளது. அப்போது தே.மு.தி.க-வை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய தி.மு.க-வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸும் தே.மு.தி.க-வை சேர்த்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விஜயகாந்துக்கு நெருக்கடி

அப்படி அந்த கூட்டணிக்கு வரவேண்டுமென்றால், தே.மு.தி.க வெற்றி பெற அவ்விரு கட்சிகளும் உதவவேண்டும் என்ற கோரிக்கையை தே.மு.தி.க முன்வைக்க வாய்ப்புள்ளது. அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும்பட்சத்தில், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷை நிறுத்தவும் தே.மு.தி.க திட்டமிடக்கூடும். வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும் மாநாட்டில், கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக பீடிகை போட்டு வரும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், இம்மாத இறுதிக்குள் (மாநிலங்களவைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்-ஜனவரி 31) முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி விஜயகாந்த் ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் தரப்பில் ஜி.கே. வாசனுக்கு, தி.மு.க-விடம் ஆதரவு கோரவும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ்-தே.மு.தி.க ஒரே கூட்டணியில் வரும் சூழல் அமையும் பட்சத்தில் சுதீஷோ அல்லது ஜி.கே. வாசனோ ஒருவருக்கு சீட் கொடுத்துவிட்டு, நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டில் அதை சரி செய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டம்.

அதுபோல், அ.தி.மு.க அணியில் 5 சீட்டுகள் உறுதியாகிவிட்டநிலையில், இம்முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது.

எது எப்படியோ, வரும் 31-ம் தேதிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளைப் போடத் தொடங்கிவிட்டன. அவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் பொருந்தி வரும். அதற்கான கூட்டணி அமைவதற்கான முன்னோட்டமாகக் கூட மாநிலங்களவை தேர்தல் அமையலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

சட்டப்பேரவை

கட்சிகளின் நிலவரம் கட்சிகள்உறுப்பினர்கள்அதிமுக150தேமுதிக28திமுக23மார்க்சிஸ்ட்10சி.பி.ஐ.8காங்கிரஸ்5பாமக3மமக2புதிய தமிழகம்2பார்வர்டு பிளாக்1சபாநாயகர்1நியமன உறுப்பினர்1காலியிடம்1மொத்தம்235

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x