Published : 10 Jul 2016 12:42 PM
Last Updated : 10 Jul 2016 12:42 PM

கோவை வாளையாறு அருகே ரயிலில் அடிபட்டு மேலும் ஒரு யானை பலி

கோவை வாளையாறு அருகே கேரள பகுதியில் 6 வயதுள்ள ஆண் யானை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்தது. இதுபோன்ற அசம்பா விதம் அடிக்கடி நடைபெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக - கேரள எல்லைப் பகுதி யாக உள்ள வாளையாறு, எட்டி மடை, மதுக்கரை பகுதியில் ஊருக் குள் யானைகள் ஊடுருவல், விவசாய விளைநிலங்கள் சேதம் ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 19-ம் தேதி ஆண் யானை ஒன்றை மயக்க ஊசி செலுத்தி பிடித்து கராலில் அடைத்தது தமிழக வனத்துறை.

இந்த யானை பிடிக்கப்பட்ட இடத் திலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் எட்டிமடை அருகே ரயிலில் அடிபட்டு பெண் யானை ஒன்று அடுத்த நாள் இறந்தது. இது யானைகள் கடக்கும் பகுதி. ரயில்கள் இங்கே 30 மைல் வேகத்துக்குள்தான் செல்ல வேண்டும். அதை மீறிய தாலேயே இந்த யானை இறந்தது என்று இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இந்த யானை இறந்த அடுத்தநாளே மதுக்கரையில் பிடிக் கப்பட்ட யானையும் டாப்ஸ்லிப் முகாமில் இறந்தது.

அதைத் தொடர்ந்து பில்லூர் அருகே எழுத்துக்கல் புதூர் என்ற கிராமத்தில் ஓர் ஆண் யானை இறந் தது. அது காயமடைந்து நீண்ட நாட்களாக காட்டில் சுற்றித்திரிந்தது. கேரள வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழக பகுதியில் வந்து இறந்தது என கூறப்பட்டது. அதற்குப் பிறகு சிறு முகையில் ஓர் ஆண் யானையும், நரசீபுரம் வனப் பகுதியில் பெண் யானையும் இறந்தன.

இந்நிலையில், நேற்று அதி காலை வாளையாறு அருகே ஆண் யானை ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. தமிழக எல்லைக்கு 300 மீட்டர் தொலைவில் இந்த யானை இறந்துள்ளது. பாலக்காடு மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெய்சங்கர் தலைமையிலான குழு, ரயில்வே போலீஸார், இயற்கை ஆர்வலர்கள், தமிழக வனத்துறை அலுவலர்கள் அங்கு வந்தனர். யானை இறந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

‘2010-ம் ஆண்டிலிருந்து இங்கே ரயில்கள் 30- 40 கிமீ வேகம் குறைத்து சென்றதாலேயே யானைகள் அடி படாமல் காக்கப்பட்டு வந்தன. அந்த நடைமுறை தற்போது பின் பற்றப்படாமல் இருப்பதாலேயே இங்கிருந்து 13 கிமீ தொலைவில் கடந்த 20-ம் தேதி ஓர் யானையும், இப்போது இந்த யானையும் அடிபட்டு இறந்துள்ளது. எனவே ரயில் ஓட்டுநர் மற்றும் லோகோ பைலட் ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என்று ரயில்வே அதிகாரிகளிடம் இயற்கை ஆர்வலர்கள் வாதம் செய்தனர்.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பின் திட்ட அலு வலர் குருவாயூரப்பன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “இந்த எல் லைக்குள் மட்டும் 7 யானைகள் வழித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கெல்லாம் யானைகள் நட மாட்டம் உள்ள பகுதி என்ற எச்ச ரிக்கை அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த யானை அடிபட்ட இடத்திலும் அறிவிப்புப் பலகை உள்ளது. கடந்த 20-ம் தேதி யானை அடிபட்ட இடத்திலும் அறிவிப்புப் பலகை உள்ளது. இந்த டிராக்கை மாற்றிப் போட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. அதை ரயில்வே துறை செய்வதில்லை” என்றார்.

இதுகுறித்து வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மேலதிகாரிகளிடம் கலந்து பேசிவிட்டுத்தான் பதில் சொல்ல முடியும்’’ என்றனர்.

ரயிலில் அடிபட்டு இறந்த யானைக்கு பாலக்காடு கால் நடை மருத்துவர் பிரான்சிஸ் தலைமையில் பிரேதப் பரிசோதனை நடந்தது.

காடுகளில் தீவனம் இல்லை

பொதுமக்கள் கூறும்போது, “இறந்த ஆண் யானையும், ஒரு பெண் யானையும் ஜோடி சேர்ந்தே இந்தப் பகுதியில் சில மாதங்களாக சுற்றித்திரிந்தன. மலைப்பகுதியில் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. தேக்கு மரங் களே அதிகமாக இருப்பதால் காடுகளில் யானைகளுக்கு தீவனங்கள் இல்லை. இரை தேடி வரும் யானைகள் இப்படி ரயிலில் அடிபட்டு இறக்கின்றன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x