Published : 18 Feb 2014 12:43 PM
Last Updated : 18 Feb 2014 12:43 PM

மூவர் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பு - திமுக முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கருணாநிதி

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிக்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது திமுக எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " டெசோ கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறுகடிதங்களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக - உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையிலும் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x