Published : 20 Jun 2015 08:31 AM
Last Updated : 20 Jun 2015 08:31 AM

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காதது பட்டினி போட்டு சாகடிப்பதாகும்: கூட்டுறவு சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது, அவர் களை பட்டினியில் வாடவிட்டு சாகடிப்பதற்கு சமமாகும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நஷ்டத்தை காரணம் காட்டி விவசாய கூட்டுறவு சங்கப் பணியா ளர்களுக்கு 34 மாதங்களாக சம்பளம் வழங்காததற்காக தனி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட விவசாயப் பணிகள் கூட்டுறவு சங்கப் பணி யாளர்கள் வி.புருஷோத்தமன் உட்பட 10 பேர் தாக்கல் செய்த மனு: விவசாயப் பணிகள் கூட்டுறவு சங்கத்தில் 29 ஆண்டுகளாக பணி புரிகிறோம். 2008-ம் ஆண்டு செப் டம்பர் மாதம் முதல் எங்களுக்கு சம்பளம் தரவில்லை. எங்களுக்கு சம்பளம் வழங்க உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டில் உத்தரவிட்டது. இருப்பினும், எங்களுக்கு சம்பளம் வழங்க மறுத்து 21.6.2011-ல் விவசாய பொறியியல் பணி ஆணையர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்துசெய்து, எங்க ளுக்கு சம்பளம் வழங்க உத்தர விட வேண்டும் எனக் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ். வைத்திய நாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வழியில்லாத நிலையில், கூட்டு றவுச் சங்கங்களை கலைப்பதை தவிர வேறு வழியில்லை. சங்கத்துக் குச் சொந்தமான பொருள்களை விற்று ஊதியம் கொடுக்க வேண் டியதுதான். தொழிலாளர் கள் சம்பளம் கேட்டு, நீதிமன் றத்துக்குதான் செல்ல முடியும். விவசாய கூட்டுறவுச் சங்கத்தில் 4 ஆண்டாக எந்தப் பணியும் நடக்கவில்லை. எனவே ஊதியம் கேட்பதற்கு ஊழியர்க ளுக்கு உரிமையில்லை எனக் கூறப் பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு வேலையில்லை, அதனால் சம்பளம் தர முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஊழியர்களுக்கு வேலையில்லை என்றால், வேலையில்லாதபோதே தொழில் தாவா சட்டத்தின்கீழ், பணிநீக்கம் செய்திருக்கலாம். அவர்கள் வேறு வேலைக்குச் சென்றிருப்பர். அதை தனி அலுவலர் செய்யவில்லை.

தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது, அவர் களை பட்டினியில் வாடவிட்டு மரணம் அடைய விடுவதற்குச் சமம். மேலும், பொருளாதார ரீதியான மரணத்தை ஊக்குவிப்பதாகும். தனி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை, நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு வழங்குவதற் காக, தலைமை நீதிபதியின் நிவா ரண நிதிக்கு வழங்க வேண்டும்.

மனுதாரர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை கணக்கிட்டு மொத்த ஊதியத்தை யும் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் 12 சதவீத வட்டி செலுத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கம் நலிவடைய தனி அலுவலர்தான் காரணம். இதனால், சங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அரசு விரும்பினால் தனி அலுவலரிடம் வசூல் செய்யலாம் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x