Published : 14 Dec 2013 12:45 PM
Last Updated : 14 Dec 2013 12:45 PM

தமிழகத்திலேயே முதன்முறையாக ஊர்க்காவல் படையில் 6 திருநங்கைகள்

தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாவட்ட ஊர்க்காவல் படையில் 6 திருநங்கைகள் சேர்க்கப்பட உள்ளனர். மதுரை மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிய வீரர்களைச் சேர்க்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் 6 பேரையும் சேர்த்துக் கொள்ள உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வீ.பாலகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து பாரதி கண்ணம்மா அறக்கட்டளை நிர்வாகி திருநங்கை பாரதிகண்ணம்மா கூறியதாவது:

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருநங்கைகளுக்கான சிறப்புக் கிளை தொடக்க விழாவிற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாலகிருஷ்ணனை அழைக்கச் சென்றிருந்தோம். அப்போது எங்களது முயற்சியைப் பாராட்டிய அவரிடம், அரசு வேலைவாய்ப்பில் எங்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று வேதனை தெரிவித்தோம்.

உண்மையிலேயே காவல் துறையில் பணியாற்றும் ஆர்வத்துடன் இருந்தால், திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் சேர்த்துக் கொள்ளத் தயார் என்றார். அதைத் தொடர்ந்து, காவல் பணிக்கு ஏற்ற உடல் தகுதி கொண்ட எங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த அனுசியா ஸ்ரீ, அல்போன்ஸா, பிருந்தா ஆகியோரையும், சோஷியல் வெல்பேர் என்ற அமைப்பைச் சேர்ந்த நிரோஸா, சௌமியா, சாந்தினி ஆகியோரையும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பரிந்துரை செய்தோம்” என்றார்.

ஊர்க்காவல் படை பணியில் சேர்வது குறித்து திருநங்கை அனுசியா ஸ்ரீ (23)யிடம் கேட்டபோது, “திருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால், சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல் துறையில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், எங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்” என்றார்.

ஊர்க்காவல் படையை கவனிக்கும் காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நல்லொழுக்கமும், சேவை மனப்பான்மை யும்தான் ஊர்க்காவல் படையினருக்குத் தேவையான தகுதி. உடல் தகுதியை எல்லாம் ரொம்ப ஆராய்வதில்லை. ஊர்க்காவல் படையினர், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டியவர்கள். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 222 ஊர்க்காவல் படை பணியிடங்கள் உள்ளன. இதில் வெறும் 59 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். கடந்த 19.11.13 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வில், புதிதாக 63 பேரைச் சேர்த்திருக்கிறோம். அவர்கள் பணியில் இணையும்போது, இவர்களும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று நினைக்கிறோம்.

அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால், தமிழகத்திலேயே முதன்முறையாக ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்ட திருநங்கைகள் இவர்களாகத்தான் இருப்பார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x