Published : 28 Oct 2014 08:33 AM
Last Updated : 28 Oct 2014 08:33 AM
கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், காட்ரோட்டில் 10 இடங்களில் ராட்சத பாறை, நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மண்ணுக்குள் புதைந்து காணாமல்போயின. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கொடைக்கானல் தனித்தீவானது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொடைக்கானலில், கடந்த நான்கு நாள்களாக மழை பெய்தது. இதில் ஆங்காங்கே சிறு சிறு மண்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ச்சியாக கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. அதனால், கொடைக்கானல் மலையில் உருவாகிய காட்டாறுகள், ஓடைகளில் வந்த மழை வெள்ளம் ஒன்றாகி பாறைகள் இடுக்குகளின் வழியாக அருவிகளாக சாலையில் விழுந்தன. அதனால், டம்டம் பாறை, பெருமாள் பாறை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட காட் ரோட்டில் மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் மண்ணுக்குள் புதைந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
டம்டம் பாறை புலிக்கோவில் அருகே 200 அடி தூரம் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை மாயமானது. அதனால், கொடைக்கானலுக்கு நள்ளிரவு 1 மணி முதல் ஒட்டுமொத்த வாகனப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. ரோட்டில் விழுந்த பெரிய பாறைகளால் ஆங்காங்கே சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மலைச்சாலை முழுவதும் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள், அருவிகள் ஓடுகின்றன. டம்டம் பாறை சாலையில் விழுந்த ராட்சத பாறை, மாயமான சாலைகளை புனரமைத்து போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க குறைந்தது 20 நாள்களுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.
வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்ல இதுதான் பிரதான சாலை. இந்த சாலை வழி யாகத்தான் மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பிற மாவட் டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பஸ்கள், கார்களில் சுற்று லாப் பயணிகள், கொடைக்கானல் வந்து செல்கின்றனர். இந்தச் சாலை துண்டிக்கப்பட்டதால் கொடைக்கானலில் தவிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் லாட்ஜ், ஹோட்டல் அறைகளில் முடங்கி உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
கொடைக்கானல் செல்வதற்கு வத்தலகுண்டு - கொடைக்கானல் சாலையை தவிர்த்து, திண்டுக்கல், சித்தரேவு, தாண்டிக்குடி, பண்ணைக்காடு வழியாகவும், பழநி வழியாகவும் இரு மலைச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் கேபிள் வயர்கள், மலைப்பகுதி செல்போன் டவர்கள் சேதமடைந்ததால் இன்டர்நெட், தொலைபேசி சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மீட்புப் பணி தீவிரம்
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன், வத்தலகுண்டு உதவி பொறியா ளர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பாறை உருண்டு விழுந்த இடங் களில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தி, டம்டம் பாறையில் சாலை மண்ணுக்குள் புதைந்த இடத்தில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி பாதையை சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.
சாலையில் ஓடும் திடீர் அருவி ஓடைகளையும், கற்களையும் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள். (அடுத்தபடம்) டம்டம் பாறை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மாயமான சாலை.
மண் சரிவுக்கான காரணம்
நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கொடைக்கானலில் அடிக்கடி நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழுவதற்கு காரணம் மரங்கள்தான். கொடைக்கானல் மலைச்சாலையில் மேற்பகுதியில் வளரும் மரங்களின் ஆணி வேர்கள் பாறை இடுக்குகளில் செல்கின்றன. இந்த வேர்கள், வெயில் காலத்தில் காய்ந்து போய் சுருங்குகின்றன. சுருங்கிய இடத்தில் இடைவெளி ஏற்படுகிறது. மழைக் காலத்தில் இந்த சுருங்கிய இடைவெளி இடங்கள் வழியாக தண்ணீர் அருவி போல கொட்டும்போது பாறைகள், மணல் சரிந்து விழுகிறது. நீண்ட நாள்களாக மழை பெய்யாமல், தற்போது மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுகின்றன'' என்றார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ‘ஷூட்டிங்’ வாகனம்
டம்டம் பாறை அருகே நேற்று முன்தினம் இரவு 12.15 மணிக்கு கன மழை பெய்தபோது, கொடைக்கானலில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு சமையல் செய்வதற்காக சென்னையில் இருந்து வேனில் இரு துணை நடிகர்கள், ஒரு பெண் சமையல்காரர், மூன்று ஷூட்டிங் உதவியாளர்கள் மற்றும் டிரைவர் உட்பட ஏழு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது மலையில் அருவி போல கொட்டிய மழை வெள்ளத்தில் சிக்கிய வேன் அரை கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
வேனில் இருந்தவர்கள் அலறினர். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனம் சாலையோரத் தடுப்பு சுவர் மீது மோதி நின்றதால் அனைவரும் இறங்கித் தப்பினர்.
கொடைக்கானல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கோடைவீரா கூறும்போது, ‘கடந்த 15 ஆண்டுகளில் இப்பகுதியில் மட்டும் 13 முறை சாலை மண்ணுக்குள் புதைந்துள்ளது. மூன்று பாறைகள் உருண்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட பிறகு, இந்தச் சாலையை முழுமையாக பராமரிக்கவில்லை’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT