Published : 13 Mar 2017 10:25 AM
Last Updated : 13 Mar 2017 10:25 AM

‘வர்தா’ புயலால் இயற்கை சூழல் மாற்றம்: நிலப்பரப்புக்கு வந்த பிளமிங்கோ பறவைகள்

வடஇந்தியா, கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வலசை (Bird migration) வந்த பிளமிங்கோ பறவைகள், வர்தா புயலால் நடப்பாண்டு வழக்கத்துக்கு மாறாக கடற்பகுதி களில் தங்குவதைத் தவிர்த்து, நிலப்பரப்புக்கு அதிகளவில் அபூர்வமாக இடம்பெயர்ந்து வந்துள்ளன.

பிளமிங்கோ பறவைகள் 4 முதல் 8 நாட்களில் ஆயிரம் கி.மீ. முதல் இரண்டாயிரம் கி.மீ. தூரத்தை கடக்கும் சிறப்பு கொண்டவை. இந்த பறவைகள் ஆண்டுதோறும் குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தென்னிந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் வலசை வருவது வழக்கம். உலகின் வட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பனிக்காலம் தொடங்கியதும் குளிரைத் தாக்கு பிடிக்க முடியாமல் சீரான தட்பவெப்ப நிலையைத் தேடியும், இரை தேடியும் பிளமிங்கோ பறவைகள் வலசை வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் தமிழகத்துக்கு பறவைகள் வரும்போது, ஆயிரக்கணக்கில் பிளமிங்கோ பறவைகளும் மதுரையைக் கடந்து பிறமாவட்ட கண்மாய்கள், ஏரிகள், கடல் பகுதிகளுக்கு செல்லும். இந்த பறவைகளின் வலசைப் பாதையில் ஒருசில நாள் ஓய்வெடுத்து செல்லும் இடமாகவே இதுவரை மதுரை மாவட்டம் இருந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக நூற்றுக்கும் மேற்பட்ட பிளமிங்கோ பறவைகள் வேறு எங்கும் செல்லாமல் மதுரை அவனியாபுரம், வண்டியூர், சாமநத்தம், திருப்பரங்குன்றம் மற்றும் வெள்ளக்கல் கண்மாய்களில் 3 மாதங்களாக தங்கியிருக்கின்றன.

இதுகுறித்து பறவையியல் ஆர்வலர் மதுரை, திருமங்கலத்தை சேர்ந்த ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

பிளமிங்கோ என்னும் பூநாரைகள் தாழ்வான ஆழமில்லாத நன்னீர் ஏரிகள், கடற்கரை யோரம் உள்ள கழிமுக பகுதிகளில் வளரும் கடல் பாசி, நுண்ணுயிர் தாவரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு வலசை வருகின்றன. பிளமிங்கோ பறவைகளின் சிறப்பு அதன் நிறமும், அதன் வாய்ப்பகுதியும் ஆகும். இவை தண்ணீருக்கு அடியில் அலகை விட்டு மண்ணைக் கிளறி அவற்றில் இருக்கும் நுண்ணுயிர்களை வாயில் எடுத்து வடிகட்டி சாப்பிடும்.

ரவீந்தரன் நடராஜன்

மார்ச் இறுதியில் இந்த பறவை களின் பூர்வீக வாழ்விடங்களில் பனிக்காலம் முடிந்து பசுமைக் காலம் ஆரம்பித்துவிடும். அதன்பிறகு அவை அங்கு சென்று, கூடு அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்க ஆரம்பித்துவிடும். அடுத்த வலசைக்கு வரும்போது தங்களுடைய இளம் பறவைகளை யும் உடன் அழைத்து வரும். இந்த ஆண்டு வர்தா புயலால் கடலின் இயற்கை சூழல் மாறிவிட்டது. அதனால், பிளமிங்கோ பறவைகள் வழக்கத்துக்கு மாறாக தமிழக கடற்பகுதிகளில் தங்குவதைத் தவிர்த்து அதிக அளவு சேலம், கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை மாவட்டங்களின் கண்மாய் களுக்கும், ஏரிகளுக்கும் வந்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பறவைகள் சரணாலயமாகுமா?

ரவீந்திரன் நடராஜன் மேலும் கூறியது: சாமநத்தம், அவனியாபுரம், பெருங்குடி, வெள்ளக்கல் கண்மாய்கள் ஆண்டுதோறும் நிரந்தரமாகவே 10 ஆயிரம் பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. இந்த பகுதிகளுக்கு ஆண்டுதோறும் பிளமிங்கோ பறவைகளும் வந்து செல்கின்றன. அதனால், இந்த பகுதி கண்மாய்களை ஒருங்கிணைத்து பறவைகள் சரணாலயமாக அரசும், வனத்துறையும் அறிவிக்க வேண்டும். இந்த கண்மாய்களில் சமீபகாலமாக இறைச்சிக்காக பறவைகள் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. மேலும், வெள்ளக்கல் நாய்கள் கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்படும் நாய்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அந்த நாய்களும், பறவைகளை வேட்டையாடி கொல்கின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x