Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

பயிர்க்கடன் இலக்கு ரூ.5,000 கோடி- பயிர் காப்பீட்டுக்கு ரூ. 242 கோடி ஒதுக்கீடு

2013-2014-ம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பயிர்க்கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.4,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.3,948 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 8.9 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2014-2015-ம் ஆண்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க்கடன் இலக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும். பயிர்க்கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டியில்லாக் கடன் வழங்குவதற்கான முழு வட்டிச் சலுகை அளிக்கப்படுகிறது. 2014-2015-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இந்த வட்டிச் சலுகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.323 கோடியில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி முறை, மேலும் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். வரும் நிதியாண்டில், நவீன கரும்பு சாகுபடி முறை மேலும் 12,500 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து கரும்பு விவசாயிகளிடையே இந்த சாகுபடி முறையையும், சொட்டுநீர்ப் பாசன முறையையும் பிரபலப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாற்று நடவு, துவரை சாகுபடியின் பரப்பளவு 97,813 ஏக்கராக உயர்ந்துள்ளது. இது, வரும் நிதியாண்டில் 1.3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். இதுபோல, கடந்த ஆண்டு 9,905 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட துல்லிய பண்ணை சாகுபடி, வரும் நிதியாண்டில் மேலும் 11,000 ஏக்கரில் விரிவுபடுத்தப்படும். பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.400 கோடியில் 1.30 லட்சம் ஏக்கர் பரப்பளவு நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விவசாயப் பணிகளுக்கான செலவைக் குறைக்கவும் “வேளாண் இயந்திரமாக்கல் திட்டம்” முனைப்புடன் செயல்படுத்தப் படுகிறது. மேலும் இதனை ஊக்குவிக்க வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி செலவிடப்படும்.பயிர்க் காப்பீட்டுக்காக ரூ.242.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x