Published : 23 Mar 2017 10:27 AM
Last Updated : 23 Mar 2017 10:27 AM

உள்ளாட்சி: இலவச திட்டமாகிவிட்டதா நூறு நாள் வேலை திட்டம்?

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஓர் அரசு திட்டம் என்றாலும் அதில் ஊழலுக்கு என்று விகிதாச்சார கணக்கு வைத்திருக்கிறார்கள். சுமார் 50 சதவீதம் வரை கமிஷன் கறந் தது போகதான் பூமி பூஜைக்கே பூசணிக்காய் உடைக்கிறார்கள். பகிரங் கமாக நடக்கிறது கொள்ளை. ஆனாலும் ‘இதுதான் யதார்த்தம்’ என்று கடந்துபோகும் சொரணையற்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளியிருக் கிறது தமிழகத்தின் மோசமான அரசியல் சூழல். ஆனால், இந்தக் கமிஷன் கணக்குகூட இல்லாமல் முழுக்க முழுக்க ஊழலால் திளைக் கும் திட்டம் ஒன்று உண்டு என்றால், அது மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்தான். கிட்டத்தட்ட இலவச திட்டங்களைப் போல இதனை ஆக்கிவிட்டார்கள். இதன் முழுப் பொறுப்பும் உள்ளாட்சிப் பிரதி நிதிகளையே சேரும்.

இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ஏழரை லட்சம் பணிகள் நடந்ததாக பொய்க் கணக்கு எழுதியது மட்டுமே பிரச்சினை இல்லை. வேலை நடந்ததாக எழுதப் பட்டு, தூர்ந்துக் கிடக்கும் அந்த நீர்நிலைகளைத் தற்போது மீண்டும் சீரமைக்க முடியாது என்பதுதான் இன்றைய நடைமுறைப் பிரச்சினை. கடும் குடிநீர் பஞ்சமும் கோடை வறட்சியும் மக்கள் மீது கொடூரத் தாக்குதலைத் தொடங்கியிருக்கும் சூழலில் ஆத்திர அவசரத்துக்குக் கூட அந்த நீர் நிலைகளில் வேலைப் பார்க்க முடியாது.

ஏற்கெனவே வேலை நடந்ததாக கணக்கு எழுதிய ஒரு ஏரியில் மீண்டும் வேலை செய்ய புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண் டும். அப்படி தயார் செய்தால் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் தணிக்கையில் சிக்கிக் கொள்வார். அடுத்தடுத்து இருக்கும் அதிகாரிகளுக்கும் இதே நிலைமை தான். அதனால், அந்த நீர்நிலை நன்றாக இருப்பதாகவே மீண்டும் மீண்டும் குறிப்பு எழுதி அனுப்புவார்கள். ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்களைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

ஏதோ அதிகாரிகளை மட்டும் குற்றம்சாட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அதன் பயனாளிகளையும் சேர்த்துத்தான் குற்றம்சாட்டுகிறேன். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் என்பது வெறும் திட்டம் மட்டும் அல்ல; அது ஓர் அரசியல் சாசனச் சட்டம். உலகிலேயே அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெறும் ஒரே திட்டம் இதுமட்டுமே. விவசாயிகளும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி யிருக்கும் குடியானவர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் நம் தேசத்தில் அவர்கள் பட்டினியில் வாடக் கூடாது; அவர்கள் சுயமரியாதையை இழக்காமல் தங்களுடைய அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் இயற்றப்பட்ட உன்னதமான சட்டம் இது!

தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தில் 117.8 லட்சம் பேர் இருக் கிறார்கள். இதில் செயல்பாட்டில் இருப்பவர்கள் 89.09 லட்சம் பேர். மாற்றுத்திறனாளிகள் 62,161 பேர். பணியாளர்களில் 69 சதவீதம் பெண்கள். 28.92 சதவீதம் பட்டியல் இனத்தவர். 1.36 சதவீதம் பேர் பழங்குடியினர். ஒருநாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.203. வேலையின் அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி கூலி ரூ.162.17. ஆனால், பணிகள் மட்டும் நடக்கவில்லை.

மேற்கண்ட ஊழலில் பெரும் பங்கு வகித்தது பெரும்பாலும் அதன் பயனாளிகளே. மரத்தடியில் உறங்கி மாலையில் எழுந்துச் சென்றார்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஊழலில் திளைத்தார்கள். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தால் தமிழகத்தின் விவசாயத் துக்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பது முழு உண்மையும் அல்ல; முழுப் பொய்யும் அல்ல. வயலுக்கு வாய்க்கால் வெட்டுவது, வரப்பு எடுப்பது, தென்னந்தோப்புக்கு குழி வெட்டித் தருவது, பண்ணைக் குட்டைகளை உருவாக்குவது, முரட்டு நிலங்களை விவசாயத்துக்கு பண்படுத்துவது என திட்டத்தின் கணிசமான வேலைகள் விவசாயம் சார்ந்தே நடந்தன.

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு வறட்சி நேரத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 70,000 பண்ணைக் குட்டைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் 30 மீட்டருக்கு 30 மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் ஆழமும் கொண்ட பண்ணைக் குட்டை வெட்ட திட்டமிட்டனர். திட்டம் தொடங்கிய போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தில் குட்டைகளை வெட்ட விண்ணப்பித்தார்கள்.

ஆனால், பாதி நாட்களை உட்கார்ந்தே கழித்து பழக்கப்பட்டுவிட்ட நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளால் திட்டத்தை முழுமையாக முடிக்க இயலவில்லை. ஆனால், அதற்குள் நாட்கள் கடந்துவிட்டன. ஒன்றரை லட்சம் ரூபாய் கூலிக்கே போய்விட்டது. பாதி குளம்கூட வெட்டப்படாத நிலை யில் விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்து குளத்தையும் இழந்து நின்றார்கள்.

கடைசியில் ஊரில் இருக்கும் மீன் வளர்ப்புக் குட்டைகள், செங்கல் சூளைக்கு மண் வெட்டிய குழிகள், சொந்த செலவில் விவசாயிகள் வெட் டிக்கொண்ட குட்டைகள், அரைகுறை யாக வெட்டப்பட்ட குட்டைகளை எல்லாம் கணக்குக் காட்டி வெற்றிகர மாக இலக்கு நிறைவேற்றப்பட்டதாக கணக்கை முடித்தார்கள் அதிகாரிகள்.

இவ்வாறு கடந்த ஐந்து ஆண்டு களில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டத் துக்கும் சட்டபூர்வமாக ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியுமா? அரசு சார்பில் கட்டப்படும் பெரும் பாலங்கள் தொடங்கி சிறு கிராமத்துச் சாலைகள் வரை அனைத்து கட்டுமானங்களின் மீதும் அதன் ஆயுள் காலம் சட்டபூர்வமாக, எழுத்து பூர்வமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒருமுறை புதியதாகப் போடப்பட்ட கிராமத்து தார் சாலை மீது மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் சாலை போட முடியாது. இடைப்பட்ட காலத்தில் அந்த கட்டுமானங்கள் சேதம் அடைந்தாலோ தகர்ந்துப்போனாலோ சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் பதில் சொல்ல வேண்டும்.

அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் நீர் நிலைகள், விவசாயம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட சுமார் ஏழரை லட்சம் பணிகளுக்கும் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி உங்கள் ஊரின் நீர் நிலை களிலும் விவசாயம் சார்ந்தும் மேற் கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x