Published : 18 Mar 2014 11:53 AM
Last Updated : 18 Mar 2014 11:53 AM
பெருந்துறை சிப்காட் தொழிற் பேட்டையில் ஜவுளிகளுக்கு சாயமேற்றி பதப்படுத்தும் தொழிற்சாலையின் கழிவு நீர் தொட்டியில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த ஆலைகள் உள்ளன. இங்குள்ள தனியார் ஆலை ஒன்றில் ஜவுளி வகைகளுக்கு சாயமேற்றி, பதப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் ஆலை வளாகத்திலேயே உள்ளது.
சாயமேற்றுதல் மற்றும் பதப்படுத்தும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் நீரில் உள்ள கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஒரு தொட்டியில் கழிவுகளும், அதிலிருந்து பிரிக்கப்படும் நீர் மற்றொரு தொட்டியில் விழும்படியும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு தொட்டிகளையும் இணைக்கும் குழாயின் மையப்பகுதியில் உள்ள வால்வில் செவ்வாய்க்கிழமை பழுது ஏற்பட்டது. இந்த பழுதைச் சரிசெய்வதற்காக, வால்வு இருந்த தொட்டியில் கவுந்தம்பாடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (35) முதலில் இறங்கினார். அப்போது பம்ப்பில் இருந்து மீத்தேன் வாயு வெளியேறியதால் ஆனந்தகுமார் மயக்கமடைந்தார்.
இவரோடு இந்த பணியை மேற்கொள்ள வந்த சென்னிமலை, முகாசிபிடாரியூரைச் சேர்ந்த மதன்குமார் (21), உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார் (32), ஈங்கூரைச் சேர்ந்த முருகன் (34), சென்னிமலையைச் சேர்ந்த சுதாகர் (28) நேபாளத்தைச் சேர்ந்த உபக்சக்தி (32) சுபக்சக்தி (20) ஆகியோர் அடுத்தடுத்து தொட்டியில் இறங்கிய போது, அவர்களும் மீத்தேன் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர். சில மணித்துளிகளில் இவர்கள் அந்தத் தொட்டியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த பணியாளர்கள் கசிவைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பணியில் ஈடுபட்ட பெருந்துறையைச் சேர்ந்த ஞானசேகரன் (44), கவுந்தப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (25), பூபதி (30), பவானியைச் சேர்ந்த விஜயகருப்பன், சுரேஷ், ஓமலூரைச் சேர்ந்த பூபதிராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜொன்ஸ் உள்ளிட்ட எட்டு பேர் மீத்தேன் வாயு தாக்கியதில் மயக்கமடைந்தனர். இவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் சண்முகம், எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் மதியழகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
உறவினர்கள் போராட்டம்
இறந்தவர்களின் உடல்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டநிலையில், அவர்களது உறவினர்கள், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அவர்களை சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
7 பேர் பலி: அதிகாரிகள் விளக்கம்
சாய ஆலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே 7 பேர் இறக்க காரணம் என்று தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் சாய ஆலையில் விஷவாயு தாக்கி 7 பேர் இறந்தனர். ஆலையின் தலைவர் மற்றும் 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன், “விபத்து நடந்த ஆலையில் ஊழியர்கள் தற்காப்புக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. மீத்தேன் வாயு தாக்கியதில் 7 பேரும் இறந்துள்ளனர்” என்றார்.
தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “கழிவு நீர் குழாயில் பழுது ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்ய இயந்திரங்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். வேறுவழியின்றி ஆட்களை பயன்படுத்தினாலும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் சிலிண்டர், முககவசம் வழங்குவதுடன் மருத்துவ உதவிக்குழுவையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவற்றை செய்யத் தவறியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறுகையில், “தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
“இதே ஆலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, கழிவு நீர்த் தொட்டியில் இறங்கிய இருவர் மரணம் அடைந்துள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் பல இருப்பினும் தொழிலாளர்களுக்கு சட்டப் படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்வதில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தெரிவித்தார்.
விபத்து எதிரொலியாக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் மாசுக்கட்டுப்பாடு துறை, தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT