Published : 21 Oct 2013 09:09 AM Last Updated : 21 Oct 2013 09:09 AM
தஞ்சை, திருவாரூர், பெரம்பலூரில் ரூ.287 கோடியில் நீர்த்தேக்கம், தடுப்பணைகள்: முதல்வர் உத்தரவு
தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், வேலூர் மாவட்டங்களில் ரூ.287.20 கோடியில் நீர்த்தேக்கம், தடுப்பணைகள், நிலத்தடி நீர் செறிவூட்டு துளைக் கிணறுகள், உயர்மட்டப் பாலம் உள்ளிட்ட பல்வேறு பாசன கட்டுமான அமைப்புகளை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காவிரி ஆறு மற்றும் அதன் கிளை நதிகள் மற்றும் வடிகால்களின் படுகை மட்டத்தை அதன் சுயமட்டத்துக்கு கொண்டு வந்து, அதன்மூலம் விவசாயிகளுக்கு உரிய பாசன வசதி அளிக்கும் வகையில் தரைமட்டச் சுவர்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 11 தரைமட்டச் சுவர்கள், 24 தடுப்பணைகள் ரூ.67.68 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில், மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடியில் நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
இதனால் 10 கிராமங்களில் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் வாய்க்கால் 0.0 மைல் முதல் 3.3 மைல் நீளம் வரை ரூ.41 கோடியில் புனரமைக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தீவாக அமைந்துள்ள ராமநல்லூர் கிராமத்தை மணவாளம் கிராமத்துடன் இணைக்க ரூ.48 கோடியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காகங்கரை ஏரிக்கு குத்தூர் ஏரியில் இருந்து ஒரு புதிய வழங்கு வாய்க்கால் ரூ.2.71 கோடியில் அமைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் வெண்ணாறு உப வடிநிலங்களில் 1335 செயற்கை முறை நிலத்தடி நீர் செறிவூட்டு துளைக் கிணறுகள் ரூ.19.81 கோடியில் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.287.20 கோடி மதிப்புள்ள பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.
WRITE A COMMENT