Published : 29 Apr 2017 09:59 AM
Last Updated : 29 Apr 2017 09:59 AM

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கு உள்நாட்டு சந்தையில் வரவேற்பு: 2024-ல் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு உள்நாட்டு சந்தையில் வரவேற்பு அதிகரித்து வருவதால், 2024-ம் ஆண்டில் இந்தத் துறையில் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என உணவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், பிற தொழிற்சாலைகளைப்போல் இந்தியாவில் தற்போது அதிக அளவில் தொடங்கப்படுகிறது. நுகர்வோரின் உணவுத் தேவை, வாழ்க்கைத் தரம், துரித உணவுகளின் தேவை, பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவதில் ஆர்வம், ஆரோக்கியமான உணவுகளின் தேவை போன்றவற்றால் உணவு பதப்படுத்தும் தொழில் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

தற்போது மக்கள் பாரம்பரிய இயற்கை உணவுகளை விட்டு விலகி, அவசர கதியில் சுவையான உணவுகளைத் தேடி வாங்கிச் சாப்பிடுவதால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

இதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்வதி கூறியதாவது:

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுகாதாரமான, மிகவும் தரமான பதப்படுத்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய உணவியல் மேலாண்மைத் துறையின் பங்கு அவசியமாகிறது. மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ப உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பெரிய அளவில் உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அதேநேரம், தரமான, நீண்ட நாட்கள் கெடாத, சுகாதாரமான, பக்குவப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதும் அவசியமாகிறது.

சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் மூலம், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றலாம். இந்தத் தொழிற்சாலைகள் மூலம், தங்கள் வருவாயை அதிகரிக்கலாம். இந்த தொழிற்சாலைகளை நடத்த வும், தொழில்நுட்பத்தோடு கையாள வும் முறையான பயிற்சி, படிப்பு அவசியம். அதற்கான மேலாண்மை கருவிகள் மற்றும் உணவுத்தொழில் நுட்பத்தை கற்றுத்தர தொழில் நுட்ப வல்லுநர்களும் அதிக அளவு தேவை.

2024-ல் இத்துறையில் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால், உணவியல் மற்றும் சத்தியல் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த படிப்பை முடித்தவர்கள், புதிய ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளை இன்றைய காலத்துக்கு ஏற்ப எல்லா வயதினருக்கும், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற வகையில் உபயோகிக்கக் கூடிய உணவுகளைக் கண்டுபிடிக் கும் ஆராய்ச்சியாளர்களாகவும் வாய்ப்பு உள்ளது.

அதனால், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில் இத்தகைய முக்கியத்துவமும், வேலைவாய்ப்புகளும் உள்ள தொழில்நுட்ப பட்டப் படிப்பான ‘உணவியல் மற்றும் சத்தியல்’பாடத்திட்டத்தைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்தப் படிப்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்களிடையே போட்டி

குறைவாக உண்பதும், அதிகமாக உண்பதும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதனால், உடல் ஆரோக்கியத்துக்கான உணவுகளைப் பரிந்துரைப்பதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், உணவு பதப்படுத்தும் துறையில் பணிபுரியவும் தற்போது ‘உணவியல் மற்றும் சத்தியல்’ இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் தேவை அதிக அளவில் இருக்கிறது. அதனால் மருத்துவம், வேளாண் கல்லூரிகளைப்போல, இந்த 4 ஆண்டு உணவியல் மற்றும் சத்தியல் படிப்பை படிக்க மாணவ, மாணவியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளை நடத்தவும், தொழில்நுட்பத்தோடு கையாளவும் முறையான பயிற்சி, படிப்பு அவசியம். அதற்கான மேலாண்மை கருவிகள் மற்றும் உணவுத்தொழில் நுட்பத்தை கற்றுத்தர தொழில் நுட்ப வல்லுநர்களும் அதிக அளவு தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x