Published : 17 Mar 2017 03:38 PM
Last Updated : 17 Mar 2017 03:38 PM
சவூதி அரேபியாவில் தனியார் நிறுவன காவலில் அடைக்கப்பட்டுள்ள புதுச்சேரி இளைஞரை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக திமுக எம்பிக்கள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.
புதுச்சேரியில் பலரும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். உள்ளூரில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாலும், நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் பலரும் பணி தேடி வெளிநாடு சென்றுள்ளனர். இந்நிலையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அரசகுமார் என்ற இளைஞர் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்..
இதுதொடர்பாக திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது:
புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமம் வடக்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த அரசகுமார் (30). இவர் கடந்த 14.4.2015-ம் ஆண்டு தனியார் முகவர் மூலம் சவூதி அரேபியாவில் உள்ள தமாம் நகரில் அல்ஹாஜிரி என்ற தனியார் நிறுவனத்தில் பணியிட மேற்பார்வையாளர் வேலைக்கு சென்றார். ஐடிஐ முடித்துள்ள இவருக்கு தெரிவிக்கப்பட்டபடி வேலை தரப்படவில்லை. வெவ்வேறு வகையான பணிகளில் அரசகுமார் ஈடுபடுத்தப்பட்டார். அவருடன் தமிழகம், ஆந்திரத்தைச் சேர்ந்த 28 இளைஞர்களும் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஊருக்கு திரும்ப அரசகுமார் முடிவு செய்து நிறுவன நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் 3 ஆண்டுகள் பணி ஒப்பந்தகாலம் முடிவடையாமல் அனுப்ப முடியாது என தெரிவித்தனர்.
இதையடுத்து அங்குள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் அரசகுமார் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே அரசகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது நிர்வாகம் செய்த புகாரின் பேரில் 1 மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் விடுதலையான நிலையில் 29 பேரையும் தனியார் நிறுவன நிர்வாகம், குவைத்-சவுதி எல்லையில் பாலைவனப்பகுதி ஒன்றில் அடைத்து வைத்துள்ளது.
அங்கிருந்து அரசகுமார் வாட்ஸ்அப் மூலம் தனது நிலையை விளக்கி உள்ளார். அவரை மீட்டித் தரும்படி முதல்வர் நாராயணசாமியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கோரிக்கை மனு அளித்தோம். அவரும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எடுத்துக்கூறினார்.
அரசகுமாரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை பதில் அனுப்பியது. ஆனால் எந்த மேல்நடவடிக்கையும் இல்லை.
இப்பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கனிமொழி, சிவா ஆகியோர் மூலம் குரல் எழுப்புவோம். மேலும் மத்திய வெளியுறவு அமைச்சரிடமும் முறையிட உளளோம் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது அரசகுமாரின் குழந்தைகள் ஹாசன், ஹாசினி ஆகியோர் தங்களின்தந்தையின் புகைப்படத்துடன் நின்றிருந்தனர். அவரது தாய் அழுதபடி இருந்தார்.
அரசகுமாரின் மனைவி மாரியம்மாள் கூறியதாவது:
"எனது கணவருக்கு உணவு, குடிநீர் தராமல் அடைத்து வைத்துள்ளனர். நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதால்தான் அடைத்துள்ளதாக தெரிகிறது. அவரது ஊதியத்தை வைத்துதான் வாழ்கிறோம். தற்போது எங்கள் குடும்பம் தவித்து வருகிறது. அரசு எனது கணவரை மீட்டு தர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT