Published : 03 Nov 2013 01:00 AM Last Updated : 03 Nov 2013 01:00 AM
கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிபோகிறது?- அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியின் பதவி பறிபோக இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக உள்ளாட்சி, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார் கே.பி.முனுசாமி. சட்டம் பயின்ற இவர், முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கடியான காலகட்டத்தில் மிகவும் உதவியாக இருந்தவர்.
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒற்றைக்கண் சிவராசன் என்பவருடன், ஜெயலலிதா இருப்பது போன்ற ஒரு போட்டோவைக் காட்டி சில அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. உண்மையில் அந்த போட்டோவில் இருந்தது கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் நஞ்சே கவுடு. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுக்கு அருகில் நஞ்சே கவுடு இருந்துள்ளார். இவர் சிவராசன் என பரபரப்பாகப் பேசப்பட்டார். இக்கட்டான சூழலில் நஞ்சே கவுடுவை, முனுசாமி சென்னைக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி அவரது கவனத்தை ஈர்த்தார்.
அதன்பின் முனுசாமி மாவட்டச் செயலாளரானார். திடீரென அவரது பதவி பறிபோனது. பின்னர், மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆனதுடன் கடந்த தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரார். அடுத்ததாக அமைச்சர் பதவியும் தேடி வந்தது. பின்னர் உள்ளாட்சித் துறையுடன், கூடுதலாக சட்டம், சிறைத்துறை அமைச்சர் பதவிகளும் அவருக்கு கிடைத்தன. கிடைத்த பதவிகள் அனைத்திலும் சூழலுக்கு ஏற்ப அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து அ.தி.மு.க தலைமையின் 'குட்புக்' பட்டியலில் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்நிலையில்தான், 'கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி பறிபோக இருக்கிறது' என்று அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பி உள்ளது.
இதுபற்றி அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசியபோது, 'நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரைதான் கே.பி.முனுசாமி அமைச்சராக இருக்கப் போகிறார். ஏனெனில், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கே.பி.முனுசாமியை வேட்பாளர் ஆக்கும் திட்டம் தலைமைக்கு இருப்பதாகத் தெரிகிறது.
சமீபத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியுள்ள நபர்கள் குறித்த பட்டியல் தரும்படி ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்களிடமும் தலைமை கேட்டிருக்கிறது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை கே.பி.முனுசாமி முதல்வரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிப் பார்த்த முதல்வர் 'லிஸ்டில் உங்கள் பெயர் ஏன் இல்லை' என்று கேட்டு உடனே எழுதி வாங்கினாராம்.
அதிமுக-வில் உள்ள இன்னொரு தரப்பினரோ, 'அமைச்சரின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இப்படி எதையாவது கிளப்பிவிட்டு அவரை தலைமையின் கோபத்துக்கு ஆளாக்கப் பார்க்கிறார்கள்' என்கின்றனர். அ.தி.மு.க-வை பொறுத்தவரை எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் இறுதி உண்மை.
WRITE A COMMENT