Published : 09 Jan 2014 09:30 AM
Last Updated : 09 Jan 2014 09:30 AM
விவேகானந்தரின் கொள்கைகளை எல்லோரும் பின்பற்றி வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கவர்னர் ரோசய்யா கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விவேகானந்தர் ரத யாத்திரைக்கு ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கோவையிலிருந்து புறப்பட்ட இந்த ரதம் சென்ற டிசம்பர் 29-ம் தேதி சென்னை வந்து சேர்ந்தது. தமிழக முழுவதும் பயணமான இந்த ரதத்திற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த ரத யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:
கலாச்சாரத்திற்கும் பாரம் பரியத்திற்கும் பெயர்போன இந்தியாவில் எவ்வளவோ அறிஞர்கள், ஆன்மிகவாதிகள், தலைசிறந்த மனிதர்கள் உருவாகியுள்ளார்கள்.
குறிப்பாக 19-ம் நூற்றாண்டில் ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்ற மிகப் பெரிய மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்தார்கள்.
இதில் சுவாமி விவேகானந்தர் இன்றளவிலும் நாட்டு மக்களுக்கு ஓர் ஆன்மிக வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தாஜி கூறுகையில், “விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகளை பின்பற்றியதால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆகவே சுவாமி விவேகானந்தரை எத்தனை முறை வேண்டுமானாலும் கொண்டாட லாம்” என்றார்.
முன்னதாக ரதத்திலிருந்த விவேகானந்தர் சிலைக்கு கவர்னர் ரோசய்யா மாலை அணிவித்து வணங்கினார். மேலும், விவேகானந்தரின்
150-வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் 150 பேர் சுவாமி விவேகானந்தரைப் போல் காவி உடை அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தாண்டவன், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் அபிராமனந்தா, முன்னாள் காவல் துறை அதிகாரி கோபால கிருஷ்ணன் ஐ.பி.எஸ் உட்பட ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT