Published : 20 Jul 2016 01:20 PM
Last Updated : 20 Jul 2016 01:20 PM
ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாரத்தில் ஒருநாள் வராவிட்டால் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் வாரம் முழுவதும் வேலை கிடைக்காமல் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்தியது. பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நூறு நாள் வேலை திட்டம் என்றும், கண்மாய் வேலை என்றும் கிராம மக்கள் இந்த திட்டத்தை அழைக்கின்றனர். விவசாயம் இல்லாத சமயங்களில் 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண்கள், பெண்களுக்கு வேலை உத்திரவாதம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன்மூலம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நிரந்தர அளவீடாக இல்லாமல் வேலைக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஆண்கள் வெளியில் கூடுதல் சம்பளம் பெறும் வேலைகளுக்குச் செல்வதால் பெரும்பாலும் கிராமப்புறங்களில் பெண்கள் தான் இந்த வேலையில் ஈடுபடுவர்.
இந்த திட்டத்தின் வாயிலாக கண்மாய்கள், குளங்கள் போன்ற நீராதாரங்கள் தூர்வாரப்படுகின்றன. சாலையோர முட்கள் அகற்றப்பட்டு கண்மாய்க் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம், குறைவான ஊதியம் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் போராட்டம், அரசு அலுவலகங்களை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிடுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இத்திட்டத்தில், வாரத்தில் ஒருநாள் வேலை செய்வதற்கான புதிய குழுக்கள் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் இடம் பெறுவர். எனவே, புதிய குழு பிரிக்கப்படும் நாளில் கண்டிப்பாக வேலைக்கு வந்தே ஆக வேண்டும். அன்று வராவிட்டால் வாரம் முழுவதும் வேலைக்கு வர முடியாது. அடுத்த வாரம்தான் வேலைக்கு வர முடியும். இதனால் உறவினர்கள் வீட்டு விசேஷம், பிற சொந்த வேலைகளுக்குச் செல்பவர்கள் கூட, குழு பிரிக்கும் நாளில் வேறு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியதாவது: ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை புதிய குழுக்களை பிரித்து ஆட்களைச் சேர்க்கின்றனர். அன்று சொந்த வேலையாக நாங்கள் வேலைக்கு வராவிட்டால் அந்த வாரம் முழுவதும் வேலைக்கு போக முடியாது. மேலும் மேலாண்மை பணியில் ஈடுபடுவோர், தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் கூடுதல் சம்பளம் வழங்குகின்றனர். பணியை பார்வையிட வரும் அதிகாரிகள், யாரும் எங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்றனர்.
இதுகுறித்து மதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியது: நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கிடையே ஊதிய முரண்பாடு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் புதிய குழு பிரிக்கும் நாளில் பயனாளிகள் வேலைக்கு வர வேண்டும் என்கிறோம். வியாழக்கிழமை ஒருநாள் வராவிட்டால் அவர்களுக்கு அதற்கேற்ப சம்பளம் குறையும். அன்று வேலைக்கு வராதவர்கள் அடுத்த நாள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். மற்றபடி, ஒருநாள் வராத காரணத்துக்காக அடுத்தநாள் அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. வாரம் முழுவதும் அவர்களுக்கு வேலை வழங்காமல் இருக்கக் கூடாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT