Published : 09 Jan 2014 07:27 PM
Last Updated : 09 Jan 2014 07:27 PM

குமரி, நெல்லையில் தொடர் மழை: தூத்துக்குடியில் மீன்வர்கள் முடங்கினர்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை, புதன்கிழமை மாலை வரைத் தொடர்ந்தது. நெல்லை, தூத்துக்குடியில் மழை மிதமாக இருந்தது.

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால், மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி சாலை, கோட்டாறு உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 22.3 மி.மீட்டர் மழை பதிவானது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீரைத் தேக்கும் பொருட்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அடைக்கப்பட்டன.

புதன்கிழமை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 21.25அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 55.70அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 90 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 13.12 அடியாகவும், பொதிகை அணை நீர்மட்டம் 4.40அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை உச்சநீர்மட்டம் 54.12 அடியாகும். தற்போது இந்த அணை நிரம்பி வழிகிறது.

மழையளவு விபரம்

புதன்கிழமை பதிவான மழையளவு விபரம்(மி.மீட்டரில்): பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி- 3.8, சிற்றாறு1- 16.8, சிற்றாறு2- 4, நாகர்கோவில்- 22.3, புத்தன்அணை- 3, சுருளோடு- 11.6, கன்னிமார்- 1.2, ஆரல்வாய்மொழி- 6, மயிலாடி- 7.2, பால்மோர்- 5.3, கொட்டாரம்- 19.2, இரணியல்- 3.2, ஆணைக்கிடங்கு- 4, குளச்சல்- 8.4, அடையாமடை- 7, கோழிப்போர்விளை- 4 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 36.40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 20, அம்பாசமுத்திரம்- 18.20, சேரன்மகாதேவி- 16, நாங்குநேரி- 22, பாளையங்கோட்டை- 16, ராதாபுரம்- 19, ஆலங்குளம்- 15.20, திருநெல்வேலி- 9, வி.கே. புதூர்- 5, சிவகிரி- 3.

பாபநாசம் அணை நீர்மட்டம் 82.85 அடியாக இருந்தது. வினாடிக்கு 329 கனஅடி தண்ணீர் வந்்தது. அணையிலிருந்து 394 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 73 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருநதது. 430 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் தூரல்

தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை தூரியது. தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நேற்றும் கடலுக்குச் செல்லவில்லை.

குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி முதல் நீரோடி காலனி வரை கடற்கரை கிராமங்களில் உள்ள கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்மழையால், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சேவைக்கு இயக்கப்படும் படகு சேவை மதியம் 1.30க்கு பிறகே இயக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x