Published : 14 Dec 2013 09:49 AM
Last Updated : 14 Dec 2013 09:49 AM
தமிழகத்தில் பல்வேறு மத்திய, மாநில மின் நிலையங்களில் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளதால், கடந்த சில தினங்களாக மின்வெட்டு அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் திட்டமிட்டபடி படிக்க முடிந்துள்ளது. மேலும் பண்டிகைக் கால முன் தயாரிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
கடந்த நவம்பரில் சென்னை தவிர தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக தொழிற்பேட்டைகள், தொழிற்கூடங்கள் அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சிவகாசி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் 10 மணி நேரம்வரை மின் வெட்டு அமலானது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக் காலம் என்பதால் அனைத்து தொழிற்கூடங்களும் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் திடீரென கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலானதால், தொழிற்கூடங்களில் அதிக அளவு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்கள் படிப்பும் பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து சென்னையிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்தது.
ஆனால், டிசம்பர் முதல் தேதியிலிருந்து மழை மற்றும் குளிர்ந்த வானிலையால், மின் தேவை வெகுவாக குறைந்தது. பராமரிப்பு பணியிலிருந்த பல மின் நிலையங்கள் மீண்டும் உற்பத்தியைத் துவங்கின. இதனால் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு அளவு குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வெறும் 200 மெகாவாட் அளவுக்கு ஆங்காங்கே பராமரிப்பு பணிக்காக மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நெய்வேலியில் இரண்டு மின் நிலையங்களில் 420 மெகாவாட், வள்ளூர் நிலையத்தின் முதல் யூனிட்டில் 500 மெகாவாட், எண்ணூர் நிலையத்தில் இரண்டு யூனிட்களில் 170 மெகாவாட், மேட்டூரில் மூன்றாவது யூனிட்டில் 210 மெகாவாட், வட சென்னை புதிய மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் 600 மெகாவாட் என மொத்தம் 1900 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், 2,000 மெகாவாட் தட்டுப்பாடு ஓரளவு சமாளிக்கப்பட்டு, மிகக் குறைந்த அளவே மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
தற்போது பழுதாக உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட், நெய்வேலியில் இரண்டு யூனிட்களில் 100 மெகாவாட், மேட்டூர் மின் நிலையத்தின் நான்காம் யூனிட்டில் 210 மெகாவாட் என்று இன்னும் சில தினங்களில் மின் உற்பத்தி துவங்கிவிடும். அப்போது தொழிற்சாலைகளுக்கான மின்வெட்டும் குறைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 230 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. தமிழக அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக 3,100 மெகாவாட், காற்றாலைகளில் 410, மத்திய மின் நிலையங்களில் 2,800 மற்றும் தமிழக நீர் மின் நிலையங்களில் 1,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. 12 மில்லியன் யூனிட் மின்சாரம் மின் வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டது.
அதிகபட்சமாக 3,100 மெகாவாட், காற்றாலைகளில் 410, மத்திய மின் நிலையங்களில் 2,800 மற்றும் தமிழக நீர் மின் நிலையங்களில் 1,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT