Published : 09 Dec 2013 08:37 PM
Last Updated : 09 Dec 2013 08:37 PM
இந்திய காவலர் கால்பந்து போட்டியில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 காவலர்களுக்கு தலா ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், 62-வது பி.என்.முல்லிக் நினைவு அகில இந்திய காவலர் கால்பந்துப் போட்டிகள் நவம்பர் 13 முதல் 22-ம் தேதி வரை நடந்தன. இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன.
இதில், தமிழக காவல் துறை சார்பில் பங்கேற்ற அணியில் உதவி கமாண்டன்ட் சார்லஸ் மேலாளராகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ பயிற்சியாளராகவும் மற்றும் 20 காவலர்களும் இடம் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட தமிழக காவலர் அணி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்நிலையில், வெற்றி பெற்ற காவலர்கள் 22 பேரும் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி, பாராட்டினார். மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்தார் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT