Published : 05 Apr 2017 07:49 AM
Last Updated : 05 Apr 2017 07:49 AM
நாடு முழுவதும் இந்த கோடையில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்
களில் ஏப்ரல் மாதத் தொடக்கத் திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.
கோடைகாலத்துக்கான (ஏப்ரல் - ஜூன்) வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைகால முன்னறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோடையில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றார்போல, மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்து வந்தது. கடந்த 2-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக 9 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. சேலத்தில் அதிகபட்சமாக 105.26 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தின் பல நகரங்களில் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளின் அதிகபட்ச வெப்பநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2016-ல் பல நகரங்களில் வெப்பநிலை அதிகமாகவே இருந்துள்ளது. அதிலும் வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வழக்கத்தைவிட இந்த ஆண்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
வழக்கத்தைவிட இந்த கோடையில் வெப்பம் அதிகம் இருக்கும் என்ற இந்திய வானிலை மைய கோடைகால முன்னறிவிப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், வழக்கத்தைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாளுக்குக்கு நாள் வெப்பநிலையில் மாற்றம் இருக்கும். தொடர்ந்து அதைக் கண்காணித்து, அறிவித்து வருகிறோம்.
சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் (105 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகம்.
காற்றின் திசை, காற்றின் ஈரப்பதம், சமநிலப் பகுதி, கடலோரப் பகுதி, மலை சார்ந்த பகுதி உள்ளிட்ட புவி அமைப்பை பொருத்து இடத்துக்கு இடம் இந்த வெப்பநிலை மாறுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, கோடை வெப்பம் அதிகரித்தால், பொதுமக்கள் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நிலவரப்படி, கரூர் பரமத்தி வேலூரில் 104.72, வேலூரில் 102.74, சேலம், மதுரையில் 102.56, பாளையங்கோட்டையில் 102.38, திருச்சியில் 101.84, திருப்பத்தூரில் 101.66, தருமபுரியில் 100.4, சென்னையில் 95.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT