Published : 08 Jan 2014 10:39 AM
Last Updated : 08 Jan 2014 10:39 AM
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 13,028 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றிசௌகரியமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 10.1.2014 அன்று 600 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 1325 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 1175 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
14.1.2014 அன்று பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதே போன்று சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10.1.2014 அன்று 345 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.
மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை 6,514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.மேலும், நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை உறவினர்கள்,நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிட வசதியாக, இதே அளவிலான சிறப்புப் பேருந்துகளை 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு, இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT