Published : 09 Mar 2017 09:07 AM
Last Updated : 09 Mar 2017 09:07 AM

ஓய்வு பலன்கள் பெறாமலே 1000 பேர் இறந்த சோகம்: ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் போக்குவரத்து துறை- கேரளாவை போன்று தமிழக அரசும் சிறப்பு நிதி ஒதுக்குமா?

ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக போக்குவரத்து துறையை மேம்படுத்த கேரளாவை போல் தமிழக அரசும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் தினமும் இயக்கப் படும் 23 ஆயிரத்து 400 அரசு பேருந்து களில் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இத்துறையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாக உள்ளது. அதே நேரத்தில் அடிக்கடி உயர்த்தப்படும் டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகளால் இந்த துறை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், தமிழக அரசும் போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய பராமரிப் பின்றி இயக்கப்படுவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பணிக் கொடை, விடுப்பு தொகை உள்ளிட்டவை 2013 அக்டோபர் மாதத்துக்கு பிறகு வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 8,500 பேர் அவதிப்படுகின்றனர். போதிய பணிக்கொடை பெறாமலேயே சுமார் 1000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடி வரும் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுடன் தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் 50 சதவிகிதத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசைப் போல, தமிழக அரசும் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறியதாவது:

நாட்டின் பெரிய சொத்தாக கருதப்படும் ரயில்வேத் துறையில் தினமும் 2.3 கோடி பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், தமிழக அரசு பேருந்துகளில் மட்டும் தினமும் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது.

ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு மட்டுமே ரூ.1,200 கோடி நிலுவையில் உள்ளது. ஓய்வு பலன்களை பெறாமலேயே 1000 பேர் இறந்துள்ளனர். மக்களின் அத்தியாவசியமாக இருக்கும் போக்குவரத்து துறையை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 15-ம் தேதி தலைமை செயலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, வரும் தமிழக பட்ஜெட்டில் சிறப்பு நிதியை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் ’’ என்றார்.

போக்குவரத்து துறையில் ஏற்படும் இழப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து போக்குவரத்து துறை வல்லுநர்கள் கூறும்போது, “பேருந்துகளை முறையாக பராமரித்து குறித்த நேரத்தில் இயக்க வேண் டும். பணியின்போது, தொழிற் சங்கத்தினர் கட்சி பணிக்கு செல்லாமல் முறையாக அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும், உதிரி பாகங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். இந்த துறையில் மொத்தம் 15 நிர்வாக இயக்குநர்கள், 80 பொதுமேலாளர்கள், 120 துணை மேலாளர்கள் இருக்கின்றனர். மொத்த வருவாயில் 44 சதவீதத்தை சம்பளத்துக்கே ஒதுக்கிவிட்டால், துறை எவ்வாறு வளர்ச்சி பெறும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x