Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

சென்னையில் பெண்களிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு; காதலன் சிக்கினார்; காதலி ஓட்டம்!

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், ராஜீவ் காந்தி சாலை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர்கள் அதிக அளவில் பஸ் மற்றும் ஆட்டோவுக்காக காத்திருப்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் விலை உயர்ந்த செல்போன் வைத்துள்ளனர்.

அந்த வழியாக பைக்கில் வரும் ஒரு காதல் ஜோடி, திடீரென யாராவது ஒரு பெண்ணிடம் சென்று ‘எங்கள் செல்போனில் பேலன்ஸ் இல்லை. செல்போனில் சார்ஜ் இல்லை. மிக அவசரமாக பேச வேண்டும். ஒரு செகண்ட் உங்கள் போனை கொடுங்கள்’ என பவ்யமாக கேட்பார்கள்.

பரிதாபப்பட்டு செல்போனை கொடுத்தால், அதை வாங்கி யாரிடமோ பேசுவது போல நடித்து திடீரென பைக்கில் ஏறி காதல் ஜோடி தப்பிவிடும்.

இதுபோன்ற நூதன சம்பவங்கள், அப்பகுதியில் அடிக்கடி நடந்து வந்தன. மோசடி காதல் ஜோடியைப் பிடிக்க போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சாதாரண உடையில் அந்தப் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே கேரளாவைச் சேர்ந்த ரேஷ்மா (22) என்பவர் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது ஒரு இளம் ஜோடி பைக்கில் வந்தது. இளைஞர் பைக்கிலேயே அமர்ந்திருக்க, அந்தப் பெண் மட்டும் இறங்கி ரேஷ்மாவிடம் வந்தார். ‘அர்ஜென்ட் மேட்டர். போனில் பேலன்ஸ் இல்லை. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’ என்று கேட்டார். ரேஷ்மாவும் தனது செல்போனை கொடுத்துள்ளார். அதை வாங்கி, ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்த அந்தப் பெண், திடீரென்று செல்போனுடன் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்.

அதிர்ச்சியடைந்த ரேஷ்மா சத்தம் போட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் பெண்ணைத் துரத்தினர். பயந்துபோன அந்தப் பெண் செல்போனை கீழே போட்டுவிட்டு, அந்த வழியாக வந்த பஸ்ஸில் ஏறி தப்பிவிட்டார். அந்தப் பெண்ணுடன் பைக்கில் வந்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

அவர் பெயர் கோட்டி என்ற ஆசிப் முகமது (21), அடையாறு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது காதலியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x