Published : 30 Jul 2014 08:50 AM
Last Updated : 30 Jul 2014 08:50 AM
பத்து வருடங்களுக்கு முன்னர் 94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், பாதிக்கப்பட்ட குழந்தை களுடைய பெற்றோரின் நீண்ட நாள் காத்திருப்பு புதன்கிழமை முடிவுக்கு வரவுள்ளது.
ஜூலை 16, 2004-ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு சமையலறையில் தீப்பிடித்து, பள்ளியின் முதல் மாடிக்குப் பரவியதில், அங்கு கூரை வேயப்பட்ட நீண்ட வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் கடும் தீக் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர விபத்துதான் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
இங்கு, ஒரே சிறிய கட்டிடத்தில் 3 பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. விபத்துக்குப் பிந்தைய கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறி மாறிச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு இன்னும் முடிவடை யாமல் உள்ளது உச்ச நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் குறித்தும், சாட்சிகளிடமும் விசாரணை செய்தார்.
501 சாட்சியங்கள்
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங் களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தமுள்ள 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னரே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT