Last Updated : 09 Apr, 2015 10:47 AM

 

Published : 09 Apr 2015 10:47 AM
Last Updated : 09 Apr 2015 10:47 AM

திருப்பதி சம்பவம்: சோகத்தில் மூழ்கிய மலை கிராமங்கள்

பேருந்தில் பயணம் செய்த தமிழர்களை வலுக்கட்டாயமாக இறக்கி கைது செய்த ஆந்திர மாநில போலீஸார், பின்னர் அவர்களை திருப்பதி வனப்பகுதியில் வைத்து சுட்டுக் கொன்றதாக தப்பி வந்தவர் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்கள் நேற்று முன்தினம் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணமங்கலம் அடுத் துள்ள காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (35), முருகாபாடி கிரா மத்தைச் சேர்ந்த மூர்த்தி (31), முனுசாமி (38), புதூர் காந்திநகரைச் சேர்ந்த மகேந்திரன் (22), வேட்டகிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (37), சசிகுமார் (34), முருகன் என்ற பீமன் (38), நம்மியம்பட்டு அடுத்துள்ள மேல்குப்சானூர் மலை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (22), வெள்ளிமுத்து (22), சின்னசாமி (47), கோவிந்தசாமி (42), ராஜேந்திரன் (30) ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தவிர 7 பேர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

அனந்தாபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 பேர் பலியான தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அனந்தா புரம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை அடை யாளம் காண தனி பேருந்து மூலம் உறவினர்கள் திருப்பதி சென்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஜமுனாமரத்தூர் மலைத் தொடரில் இருந்த ஏராளமான சந்தன மரங்களை மலைக் கிராம மக்கள் உதவியுடன் கடத்தல் கும்பல் வெட்டிக் கடத்தியது. சந்தன மரங்கள் முற்றிலும் அழிந்ததால் வேலை இழந்த தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு சென்றனர்.

தற்போது, ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் கடத்தல் தொழில் அமோகமாக நடக்கிறது. இந்த தொழிலின் முக்கிய புள்ளிகள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திர மாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளனர். இவர்கள், மலைக் கிராம மக்களையும், மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு பணத்தாசை காட்டி மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர்.

ஒருமுறை மரம் வெட்டும் தொழிலுக் காக திருப்பதி சென்றால் 4 நாட்கள் ஆகும். கட்டிங் அண்டு லோடிங் என்ற அடிப்படையில் ஒருவருக்கு ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் வரை கூலி கிடைக்கும். இந்த பணத்தை வைத்து மாதத்தின் மீதி நாட்களை கடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் பலர் இந்த தொழிலுக்கு ரகசியமாக செல்கின்றனர்.

சந்தனமரம், செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள, இந்த பகுதி யைச் சேர்ந்தவர்கள் கோட்டீஸ்வரர் களாக இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை போலீஸாரிடம் சிக்கியதே கிடையாது. போளூர், கண்ணமங்கலம், வேலூரில் அலுவலகம் வைத்துக் கொண்டு செம்மரக் கடத்தல் தொழிலை செய்கிறார்கள் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். திருப்பதியில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட கொலை என்றும் அவர்கள் கூறினர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சித்தேரி ஊராட்சியைச் சேர்ந்த 7 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (42), லட்சுமணன் (45), சிவகுமார் (35), வெங்கடேசன் (25), டி.லட்சுமணன் (30), ஆலமரத்துவளவைச் சேர்ந்த வேலாயுதம் (25), கருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் வேலாயுதத்துக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

கடந்த 6-ம் தேதி பல்வேறு பணி களுக்கு செல்வதாக அவரவர் வீடு களில் தகவல் அளித்துவிட்டு ஆந்திரா சென்றுள்ளனர். 7-ம் தேதி என்கவுன்டர் சம்பவத்துக்குப் பின்னரும் கூட இந்த கிராம மக்களுக்கு இதுபற்றிய தகவல் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை செய்தித்தாள்களிலும், டிவியிலும் இறந்தவர்களின் போட் டோக்களைப் பார்த்தபிறகே சித்தேரி மலைப்பகுதி மக்கள் பதற்றமடைந் தனர்.

போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத மலைகிராமம் என்பதால் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அரூர் அருகேயுள்ள கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதிக்கு இந்த கிராம மக்கள் நேற்று காலை வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஆந்திராவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தங்கள் வீட்டு ஆண்கள் எங்கு, என்ன வேலைக்கு சென்றுள்ளனர் என்பதைக் கூட அறியாத சித்தேரி கிராம பெண்கள் சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலான வர்கள் 10-ம் வகுப்பைக் கூட கடக்காத குழந்தைகளின் தந்தையர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சித்தேரி மலை கிராமங்கள் முழு வதும் சோகம் சூழ்ந்துள்ளது.

‘தனி மரமானேன்’: கணவரை இழந்தவர் கதறல்

வேலூர்

திருப்பதி வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர் கள் அனைவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் செம்மரம் வெட்டச் சென்றுள்ளனர். கணவரை, மகனை, தம்பியை, அண்ணனை இழந்தவர்கள் ‘தி இந்து’வுக்கு அளித்த கண்ணீர் பேட்டி:

ஜெயந்தி (பழனி மனைவி):

எங்களுக்குத் திருமணமாகி 14 மாதங்கள்தான் ஆகின்றன. ஒன்றரை மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு இன்னும் பெயர்கூட சூட்டவில்லை. டெய்லர் வேலை செய்து தினமும் 300 ரூபாய் வரை சம்பாதித்தார். அவர் மரம் வெட்டப் போன விஷயம் யாருக்கும் தெரியாது. பைக் ரிப்பேர் செய்துவிட்டு வருவதாக கூறிச் சொன்னார். போலீஸ் வந்து சொல்லும்போதுதான் இறந்தது தெரியும். கைக்குழந்தையுடன் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.

தஞ்சம்மா (முருகன் மனைவி):

என் கணவர் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்குச் செல்வார். வேலை இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார். 2 மகள்களில் ஒருவருக்கு திருமணம் செய்துவிட்டோம். மற்றொருவர் 8-ம் வகுப்பு படிக்கிறார். கணவர் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்திவந்தோம். திங்கள்கிழமை என்னோடு சண்டை போட்டுவிட்டுச் சென்றார். மரம் வெட்டப்போகிறோம்னு சொல்லவே இல்லை. அவர் வருவார்னு பார்த்திருந்தேன். இப்ப தனிமரமாகிவிட்டேன்.

முனியம்மா (சசிகுமார் மனைவி):

ரெண்டு சின்ன பசங்கள வெச்சிகிட்டு என்னப் பண்ணப்போறேன்னு தெரியவில்லை. பெயின்ட் அடிக்குற கூலி வேலைக்கு போறவரை, மனசு மாத்தி மரம் வெட்ட கூட்டிட்டு போயிட்டாங்க.

செம்மரம் வெட்டச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாமல் சென்ற சம்பவம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து படவேடு செல்லும் சாலையில் உள்ள காளசமுத்திரம், அனந்தாபுரம், வேட்டகிரிபாளையம், காணமலை பகுதியில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x