Published : 05 Mar 2014 12:41 PM
Last Updated : 05 Mar 2014 12:41 PM
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் போராட்டங்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) கடலுக்குச் சென்று திரும்பினர்.
கடந்த ஒரு மாத காலமாக பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலைவரையற்ற வேலை நிறுத்தம் கண்டன ஆர்ப்பாட்டம், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம், மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு என பல்வேறு கட்டப் போராட்டங்கள் மூலமாக தீவிரமாக போராடி வருகின்றனர்.
நாட்டுப்படகு மீனவர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் தலைமையில் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்று 41 விசைப் படகுகள் மீது தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 41 விசைப்படகுகளுக்கு கடலுக்கு செல்ல டோக்கனும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மார்ச் 01 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுபடகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று செவ்வாய்கிழமை இரவு கடலுக்குச் சென்று புதன்கிழமை காலை கரை திரும்பினர்.
மேலும் இந்த படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதில் இறால் மீன் பிடிக்க சென்ற 15 படகுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 41 விசைப்படகுகளில் 17 விசைப்படகுகள் இறால் மீன் பிடிக்க சென்ற படகுகள் மீதும் தவறுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் 17 விசைப்படகுகள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி புதன்கிழமை காலை ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்வளத் துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் விசைப்படகு மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT