Last Updated : 31 Mar, 2014 10:40 AM

 

Published : 31 Mar 2014 10:40 AM
Last Updated : 31 Mar 2014 10:40 AM

தனியார் மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தி போடும் தடுப்பூசிகள்: குழந்தைகள் உடல்நிலை பாதிக்கும் அபாயம்- பெற்றோர் புகார்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தவும், தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கவும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகளில் அனைத்து தடுப் பூசிகளையும் குழந்தைகளுக்கு கட்டாயம் போட வேண்டும் என அச்சுறுத்துவதாகவும், தடுப்பூசி களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

16 வயது வரை தடுப்பூசி

எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பணியாற்றி வரும் குழந்தை நல நிபுணர் டாக்டர் முரளிதரன் கூறியதாவது: தனியார் மருத்துவ மனைகளில் பிறந்தது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகளாக பார்க்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளும் தனியார் மருத்துவமனைகளில் போடுகிறோம். மேலும் அரசு மருத்துவமனைகளில் போடாத மஞ்சள் காமாலைக்கான ஹெபடைடிஸ்-ஏ, சின்னம்மை மற்றும் டைபாய்டு போன்ற பல தடுப்பூசிகளையும் போடுகிறோம். இந்த தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் குழந்தைக ளுக்கு போடுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும் என அட்டவணையை பெற்றோரிடம் கொடுத்துவிடுவோம். அதன்படி, அவர்கள் வாரம், மாதம், ஆண்டு என தொடர்ச்சியாக தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடுவார்கள். எல்லா தனியார் மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மருத்துவமனைக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது என்றார்.

கட்டாயப்படுத்தி போடுகிறார்கள்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: அரசு மருத்துவ மனைகளில் பிறந்தது முதல் 12 வயது வரை உள்ளவர்களை மட்டுமே குழந்தைகளாக பார்க் கிறோம். அதனால், பிறந்தது முதல் 12 வயது வரை தேவையான மற்றும் முக்கியமான தடுப்பூசிகளை மட்டும் போடுகிறோம். அதற்கு தான் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுவே குழந்தைகளுக்கு போதுமானது. இவை தவிர திடீரென்று புதிதாக வரும் நோய்களை தடுக்க, அந்த நேரத்தில் அதற்கான தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடுகிறோம். அதன்படி தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா போன்றவை புதிதாக வந்தபோது, அதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி களை போட்டோம். ஆனால், தனியார் மருத்துவ மனைகளில் அப்படி இல்லை. விருப்பம் இருந்தால் போடலாம் என்ற தடுப்பூசிகளைக் கூட குழந்தை களுக்கு போட வேண்டும் என கட்டாயப்படுத்தி போடுகின்றனர்.

குழந்தைக்கு பாதிப்பு

தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

இல்லாத நோயை இருப்பதாக காட்டியும், பொய்யான புள்ளி விவரங்களை தெரிவித்தும் தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாத தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போட்டு பணம் சம்பாதிக்கின்றனர். அரசு பரிந்துரைத்த தடுப்பூசிகளை மட்டும் குழந்தைகளுக்கு போட்டால் போதுமானது. தேவையில்லாத தடுப்பூசிகளை போடுவதால் குழந்தைகளின் உடல்நிலை பாதிக் கப்படும்.

ஊசி மூலம் போலியோ மருந்து

அதேபோல இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாய்வழி போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. வாய்வழி சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் 10 லட்சம் குழந்தைகளில், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மீண்டும் போலியோ நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், குழந்தைகளுக்கு ஊசி மூலம் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பல நாடுகளில் குழந்தைகளுக்கு ஊசி மூலம் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. அதே போல, இந்தியாவிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஊசிமூலம் போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x