Last Updated : 30 Nov, 2013 12:00 AM

 

Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

ரயில் முன்பதிவு டிக்கெட்டுடன் போலி அடையாள அட்டையும் விற்பனை

ரயில் முன்பதிவு டிக்கெட்டுடன் போலி அடையாள அட்டையும் தயாரித்துக் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளதால், டிராவல் ஏஜெண்டுகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 3800 ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளன. இதுதவிர, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.), இன்டர்நெட் புக்கிங், டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களின் கம்ப்யூட்டர், செல்போன்களில் இ-டிக்கெட் மூலம் தினமும் லட்சக்கணக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

ரயிலில் குளிர்சாதன பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலியான பெயரில் டிக்கெட் எடுத்து விற்பனை செய்த டிராவல் ஏஜெண்டுகள், இப்போது போலியான அடையாள அட்டையையும் தயாரித்துக் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

டிராவல் ஏஜெண்டுகள் முன்கூட்டியே சிலரது பெயரில் இ-டிக்கெட் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். யாராவது

டிக்கெட் கேட்டு வந்தால், ஏற்கனவே போலி பெயரில் எடுத்து வைத்துள்ள பெயருடன் அவரது பெயர் ஒன்றுபோல இருந்தால், சற்று கூடுதல் கட்டணத்துடன் டிக்கெட்டை விற்றுவிடுகின்றனர். டிக்கெட் வாங்க வந்தவரிடம் அடையாள அட்டை இல்லையென்றால், அவரது பெயரில் ஓட்டுனர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்துக் கொடுத்து மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். போலியாக தயாரித்துக் கொடுக்கப்படும் ஓட்டுனர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஹாலோ கிராமுடன்கூடிய அசல் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ரயில்வே அங்கீகாரம் பெற்ற 40 ஆயிரம் டிராவல் ஏஜெண்டுகள் உள்ளனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர். போலி டிக்கெட் மற்றும் போலி அடையாள அட்டை விற்பனையைதொடர்ந்து கண்காணிக்கிறோம்.

நாங்களே பயணிகள் போல டிக்கெட் முன்பதிவு செய்து பின்னர் ரத்து செய்வோம். இப் பணியில், தெற்கு ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் ,ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பிடிபடும் டிராவல் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு, அபராதம், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ரயில்வே அங்கீகாரம் இல்லாத ஏஜெண்டுகள், போலி அடையாள அட்டைகளை விற்கும் வாய்ப்பு உள்ளது. அதுபற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். வீட்டில் இருந்தபடி இந்த முறைகேட்டைச் செய்வதால், அவர்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது.

இருந்தாலும், டெல்லியில் போலி ரயில் டிக்கெட்டுடன், போலி அடையாள அட்டையும் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x