Published : 04 Aug 2016 02:42 PM
Last Updated : 04 Aug 2016 02:42 PM
‘கபாலி’ திரைப்பட வெளியீட்டின்போது, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகரில், ‘கபாலி’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் வருவாய் கோட்ட அலுவலர் நர்மதாதேவி தலைமையிலான அதிகாரிகள், ஜூலை 21-ம் தேதி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் திரை யரங்குகளில் ரூ.200 முதல் 700 வரை டிக்கெட் விற்பனை செய்யப் பட்டது தெரியவந்தது. அனைத்து திரையரங்குகளிலும் வணிகவரித் துறையின் சீல் வைக்கப்படாத டிக்கெட்களை விற்பனை செய்யப் பட்டதும், ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் அதிக காட்சிகள் திரையிடப்பட்டதும் உறுதிப் படுத்தப்பட்டது.
ஆனால், ஆய்வு முடிந்து 10 நாட்களாகியும் அதிக கட்டணத்திற்கு டிக்கெட் விற்பனை செய்த திரையரங்குகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன் தினம் ஆடிப்பெருக்கு தினத்தன்று ஈரோடு திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பும் திரையரங்குகள் தங்கள் கட்டண கொள்ளையை தொடர்ந்து வருவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆர்டிஓ நர்மதாதேவியிடம் கேட்ட போது, ‘ஈரோட்டில் உள்ள திரை யரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆட்சியருக்கு புகார்கள் வந்ததால், ஆய்வு நடத்த உத்தரவிட்டார். திரையரங்கு களுக்கு வருவாய்துறை அலுவலர்களை அனுப்பி சாதாரண பொதுமக்களைப் போலவே டிக்கெட் வாங்க வைத்தோம். இதில், அனைத்து திரையரங்குகளிலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது உறுதிப் படுத்தப்பட்டது.
அதன் பின் நேரடி ஆய்வு மேற்கொண்டபோது, அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதையும் கண்டறிந்தோம். இது குறித்து சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. இதையடுத்து திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளேன்’என்றார். இது தொடர்பாக ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் கேட்டபோது, ‘ஆர்.டி.ஓ.விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
புகார் செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு
திரையரங்கு கட்டணங்களை முறைப்படுத்த குழு மற்றும் புகார் எண் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வருவாய் கோட்ட அலுவலர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், கேளிக்கை வரி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு (0424 2260211) புகார் செய்யலாம்.
மேலும், 78069 17007 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் புகார் தெரிவிக்கும் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT