Published : 20 Jan 2014 10:25 AM
Last Updated : 20 Jan 2014 10:25 AM

நீலகிரியில் தி.மு.கவை வீழ்த்த அ.தி.மு.க. வியூகம்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வசமுள்ள நீலகிரி தொகுதியைக் கைப்பற்ற அ.தி.மு.க. துரிதமாக களமிறங்கி யுள்ளது. நீலகிரி மாவட்டம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது.

திராவிடக் கட்சிகளின் ஆதிக் கத்தால் மெல்ல மெல்ல திராவிடக் கட்சிகளின் கைவசம் சென்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான அலையிலும், கூடலூர், குன்னூர் தொகுதிகள் தி.மு.க-வுக்குக் கிடைத்தன. காங்கிரஸ் வசமிருந்து உதகை தொகுதியை, அ.தி.மு.க. தட்டிப் பறித்தது.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி, உதகை, குன்னூர், கூடலூர் மட்டுமல்ல; சமவெளிப் பகுதிகளில் உள்ள மேட்டுப் பாளையம், அன்னூர், பவானிசாகர் ஆகிய 3 தொகுதிகளும் உள்ளடக்கியவை.

இந்த 3 தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு உள்ளது என கருதப்படுவதால், நீலகிரியில் தி.மு.க-வுக்கு சாதகமாக உள்ள குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க. களமிறங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே, கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அரசு விழாவை, குன்னூரில் நடத்த உத்தரவிட்டார்.

நீலகிரிக்கு ரூ.117 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிவித்தார். இந்த முறையும் தி.மு.க. சார்பில் ஆ.ராசா, நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது.

நீலகிரியில், குறிப்பாக கூடலூரில், ராசாவின் செல்வாக்கு மேலோங்கியுள்ளது. இதை தகர்த்தெறியும் வகையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை அ.தி.மு.க-வில் இணைத்துள்ளனர். கோத்தகிரியில் நடந்த, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.கவில் இவர்கள் இணைப்பு முதல்வர் முன்னிலையில் நடந்தது.

நீலகிரி தொகுதி தனித் தொகுதியாக உள்ளதால், அ.தி.மு.க. சார்பில் களமிறக்கவே படுகர் அல்லாத கலைச்செல்வன், மாவட்டச் செயலாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், மாவட்டச் செயலாளர் போட்டியிட அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கட்சியினர் கூறி வருகின்றனர்.

சமவெளிப் பகுதிகளில் மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகள் மேலோங்கி வரும் நிலையில், நீலகிரியில், மின்வெட்டு மற்றும் மாநில அரசை பாதிக்கும் விஷயங்கள் பெரிய அளவில் இல்லாதது, அ.தி.மு.க-வுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், வெற்றி பெற அ.தி.மு.க. கடுமையாக உழைக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x