Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
குடிசைகளை ஒழிப்பதற்காக குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டதுபோல் வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சாலைவாழ் மக்கள் நல வாரியம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்தியாவில் அதிகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான தனி நபர்களும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களும் வீடில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதைத் தவிர கணக்கில் வராமல் மேம்பாலங்களுக்கு அடியிலும், ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடில்லாமல் வசிக்கிறார்கள்.
கூவம் நதிக்கரை, வடசென்னையில் அதிகம்
சென்னையை பொருத்தவரை வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் வீடில்லாதவர்கள் ஏராளமாக வசிக்கிறார்கள். அதேபோல் சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கூவம் ஆற்றங்கரையோரமும் வீடில்லாத மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். எனவே குடிசை மாற்றுவாரியம் போல் சாலைவாழ் மக்கள் நல வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
எம்.எல்.ஏ. குடியிருப்பிற்கு அருகே..
இதுகுறித்து வீடில்லாமல் குடும்பத்தோடு வசித்துவரும் கனகலட்சுமி கூறுகையில், “பத்து வருடத்துக்கு முன்பு செம்மஞ்சேரியில் கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்தபோது, நாங்கள் மடிப்பாக்கத்தில் ரூ.1,500 வாடகைக்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட வீட்டில் குடியேறினோம். என் கணவர் தினக்கூலிக்கு செல்கிறார். வீட்டு வாடகை ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டபோது வேறு வழியில்லாமல் 3 பிள்ளைகளுடன் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையோரம் குடியேறினோம்.
இந்தப் பக்கமாகத்தான் எம்.எல்.ஏ. குடியிருப்பு உள்ளது. பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த வழியாகத்தான் போகிறார்கள். ஆனால், எங்களுக்காக பேச யாருமில்லை. எங்களுக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
வாரியம் வேண்டும்
பாரிமுனையில் வசிக்கும் முருகேசன் கூறுகையில், “15 ஆண்டுக்கும் மேலாக இங்குதான் வசிக்கிறேன். வெயில், மழை, கொசு எல்லாம் பழகிவிட்டது. அவ்வப்போது மாநகராட்சி இரவு விடுதிகள், கோயில் திண்ணைகள் என்று எங்காவது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் போல், சாலையோரம் வசிக்கிற மக்களுக்கும் தனி வாரியம் அமைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் தலைவர் தங்கமுத்து கூறுகையில், “சாலையோரம் வாழும் மக்களாகட்டும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களாகட்டும் அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாநகராட்சிகள் வீடில்லாத மக்கள் குறித்த தகவல்களை குடிசை மாற்று வாரியத்திற்கு தெரிவிக்கும் பட்சத்தில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீடுகள் வழங்கப்படும்” என்றார்.
மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் வீடற்றவர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் 20-க்கும் அதிகமான இரவு விடுதிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை தவிர 40 புதிய விடுதிகளும் கட்டப்படவுள்ளன. மேலும் வீடில்லாமல் வசிப்பவர்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT