Last Updated : 22 Sep, 2014 08:45 AM

 

Published : 22 Sep 2014 08:45 AM
Last Updated : 22 Sep 2014 08:45 AM

ஆவின் பால் பாக்கெட் விநியோகத்திலும் குளறுபடி - அரசுக்கு தினசரி பல லட்சம் இழப்பு: ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்

ஆவின் பாலில் நீர் கலக்கப்பட்ட ஊழல் வெளியான நிலையில், ஆவின் பால் பாக்கெட் மற்றும் அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படும் பிளாஸ்டிக் டப்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவது பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆவின் ஊழியர்கள் கூறுகின்றனர்.

>ஆவின் பால் ஏற்றி வந்த லாரியை நடுவழியில் நிறுத்தி, அதில் தண்ணீரைக் கலந்து மோசடி செய்தது கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதுபோல் மேலும் ஒரு பெரிய முறைகேடு நடந்து கொண்டிருப்பதை ஆவின் நிறுவன ஊழியர்கள் சிலர் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் ‘தி இந்து’ நிருபரிடம், கூறியதாவது:-

சென்னையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை பெருகிவந்தாலும், அரசுத் தயாரிப்பு என்ற நம்பகத்தன்மை காரணமாக ஆவின் பாலுக்கு மக்களிடையே உள்ள வரவேற்பு அதிகம். இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை வாங்க கடும் போட்டி நிலவுவது வழக்கம். ஆனால், கொள்முதல் குறைவு மற்றும் முறைகேடு ஆகிய காரணங்களால் மாதாந்திர பால் கார்டுகள் விநியோகம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. புதிய கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டறியப்பட்ட முறைகேடு, பாக்கெட்டில் அடைக்காத உதிரிப்பால் பற்றியதாகும். ஆனால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலிலும் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்து வருகின்றன.

சென்னையில் 11.8 லட்சம் லிட்டர் பால், 516 டெப்போக்கள் மூலமாக சுமார் 6.5 லட்சம் கார்டுதாரர்களுக்கும், சில ஏஜென்சிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த பால் பாக்கெட்டுகள் செவ்வக வடிவிலான பிளாஸ்டிக் டப்-களில் அடுக்கி டெப்போக்களுக்கும், சில்லறை விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றன.

சென்னையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணைகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் லாரியில் ஏற்றப்பட்டு நகர் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. பால் பாக்கெட்டுகள், டப்-களில் அடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படுகின்றன. 10 டப்-கள் ஒரு அட்டி என குறிப்பிடப்படுகின்றன. ஒரு டப்பில் 24 அரை லிட்டர் பாக்கெட்டுகளை வைக்கலாம். இந்த பால் டப்கள் லாரியில் ஏற்றப்படும்போது முறைகேடுகள் நடக்கின்றன.

ஒரு டெப்போவில் இருந்து நாளொன் றுக்கு 60 முதல் 70 லாரிகள் பால் விநியோகத்தை மேற்கொள்கின்றன. அந்த லாரிகளில் ஏற்றப்படும் பால் டப்-களை கண்காணிக்க ’மில்க் ரெகார்டர்’கள் (எம்.ஆர்.) நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த எம்.ஆர்.கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் பல லாரிகளை ஒரே நேரத்தில் அவர்களால் கண்காணிக்க முடிவதில்லை. பாலை லாரியில் ஏற்றும்போது 10 அட்டிகளாக அடுக்கவேண்டும். ஆனால் எம்.ஆர்கள் கண்காணிக்காத நேரத்தில் 10 அட்டிக்கு பதிலாக 12 அட்டிகள் ஏற்றப்படுகின்றன. இவ்வாறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகள் முறைகேடாக ஏற்றப்படுகின்றன. மேலும், அந்த டப்-களில், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படுகின்றனவா என்பதை பல நேரங்களில் ஊழியர்களால் உன்னிப்பாக கண்காணிக்க முடியாமல் போகிறது.

அங்கு பணியில் இருக்கும் ஒப்பந்ததாரர் காவலர்கள் பலரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை. இறுதியில், ஒப்புதல் தரவேண்டிய செக்கிங் சூப்பிரண்டெண்டுகளால் முறைகேட்டினை துல்லியமாக கவனித்து தடுக்கவும் முடியாது. இதனால் ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான பால் டப்-களும் தொடர்ந்து திருடுபோகின்றன.

இதுபோல் ஒழுகும் பால் பாக்கெட்டு களை மாற்றிவிட்டு, நல்ல பாக்கெட்டுகளை அடுக்கும்போதும் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் திருட்டுத்தனமாக வைக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறாக திருடப்படும் ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகளை பால் விநியோக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கும் சில லாரி கிளீனர்களும், ஓட்டுநர்களும் வெளியில் விற்றுவிடுகிறார்கள். அப்பணியாளர்கள் எங்களைவிட மிக வசதியாக இருக்கிறார்கள்.

இந்த நூதனமான, பெரிய அளவிலான முறைகேட்டினை தடுத்துநிறுத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி நஷ்டம் குறையும். மேலும், ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள், குறைந்த விலையில் தரமான பாலை பெறவும் வழியேற்படும். உதிரி பால் திருட்டைக் கண்டுபிடித்த தமிழக அரசு, பால் பாக்கெட் முறைகேட்டையும் தடுத்து நிறுத்தி ஆவினுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை நீக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஆவின் மேலாண் இயக்குநர் சுனில் பாலிவாலிடம் கேட்டபோது, “பால் பாக்கெட் ஏற்றப்படுவதை கண்காணிக்க போதுமான வழிமுறைகள் உள்ளன. எனினும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கவில்லை என கூறமுடியாது. எங்கள் கவனத்துக்கு வரும்போது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். ஆவினில் ஆள்பற்றக்குறை உள்ளது. அதனை சரிசெய்ய திடீர் சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகள் கழித்து 130 பேரை சமீபத்தில் நியமித்தோம். வரும் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், மேலும் புதிய ஊழியர்களை நியமிக்க அனுமதி பெறவுள்ளோம். நீங்கள் கூறும் எம்.ஆர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதை உடனடியாக செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x