Published : 19 Feb 2014 12:20 PM
Last Updated : 19 Feb 2014 12:20 PM
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தினமும் 1.50 லட்சம் பேர்
சென்னையில் உள்ள மிகப் பழமையான ரயில் நிலையங்களில் எழும்பூரும் ஒன்று. தென் மாவட்டங் களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட மொத்தம் 28 ஜோடி ரயில்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றன. ரயிலில் பயணம் செய்பவர்கள், அவர்களை வழியனுப்ப வருபவர்கள் என தினமும் 1.50 லட்சம் பேர் வந்துபோகும் பரபரப்பான ரயில் நிலையம். ஆனால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை என்கின்றனர் பயணிகள்.
கழிப்பிடம் இல்லை
எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் போக்குவரத்துக்காக 11 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 6-வது பிளாட்பாரம், 11-வது பிளாட்பாரம், காத்திருப்போர் அறை ஆகிய இடங்களில் மட்டுமே கழிப்பிடங்கள் உள்ளன. நாள்தோறும் லட்சத்துக்கும் அதிகமானோர் வரும் இடத்தில் இந்த கழிப்பிடங்கள் போதுமா என்பது பயணிகளின் ஆதங்கம்.
குடிநீர்க் குழாயில் காற்று
எல்லா பிளாட்பாரங்களிலும் குடிநீர்க் குழாய் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும் அவற்றில் தண்ணீர் வருவ தில்லை. பாட்டில் குடிநீரைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகிக்கப் படுவதில்லை. இதனால், ரயில்களிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரப்பப்படு வதில்லை. இங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரயில்களில் பாதி வழியிலேயே தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. அதற்குப் பிறகு காற்றுதான் வருகிறது என்றும் கூறுகின்றனர்.
பிளாட்பாரங்களில் போதிய இருக்கைகள் இல்லை. அதனால் மூட்டை, முடிச்சுகளுடன் பயணிகள் ஆங்காங்கே தரையில் அமரவேண்டியுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் விற்கப்படும் கவுன்ட்டர்களுக்கு எதிரே குடும்பம் குடும்பமாக பயணிகள் தரையில் அமர்ந்திருப்பதும் பலர் அங்கேயே படுத்து தூங்குவதும் பெண்கள் கைக்குழந்தையுடன் சிரமப்படுவதும் தினசரி காட்சிகள்.
பாரம்பரியமிக்க, பரபரப்பான எழும்பூர் ரயில் நிலையத்திலேயே இந்த நிலை என்றால், மற்ற ரயில் நிலையங்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை.
விரைவில் சீராகும்
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டிவிட்டதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என்று சென்னை கோட்ட ரயில்வே மேலாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
2 மாதங்களுக்கு முன்பு கோட்ட மேலாளரே எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். பயணிகள் வசதிக்கான இந்திய ரயில்வே குழு தலைவர் டி.நாராயணசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். விரைவில் போதுமான அளவு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT