Last Updated : 19 Apr, 2017 04:18 PM

 

Published : 19 Apr 2017 04:18 PM
Last Updated : 19 Apr 2017 04:18 PM

அதிமுகவின் அடுத்த ஆளுமை யார்?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் பரபரப்பாக, திடீர் திருப்பங்களைக் கொண்டதாக, கணிக்க முடியாததாக உள்ளது. அதிமுக உட்கட்சியில் ஏற்படும் அதிர்வலைகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதோ, இல்லையோ அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதோ, எதிர் கேள்வி கேட்பதோ எப்போதும் நிகழாத சம்பவம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியும், கட்சியும் வேறு வேறு இடத்தில் இருந்தது.

ஓபிஎஸ் முதல்வராகவும், சசிகலா பொதுச் செயலாளராகவும் இருந்த சூழல் மாறி கட்சியும், ஆட்சியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று கூறி சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் நடந்தன. முதல்வர் அதிகாரப் போட்டியில் போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், சசிகலாவுக்கு எழுந்த எதிர்ப்பலை, ஓபிஎஸ்ஸுக்கு குவிந்த மக்கள் செல்வாக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை, புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமனம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு, இரட்டை இலை சின்னம் முடக்கம், அதிமுக அம்மா கட்சி - அதிமுக அம்மா புரட்சித்தலைவி கட்சி, பணப் பட்டுவாடா புகார், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து, ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்குத் தயார் என வெளிப்படையாக அறிவித்தது என கடந்த 5 மாதங்களில் எதிர்பார்த்ததை விட அதிக திருப்பங்கள் ஏற்பட்டன.

இந்த 5 மாத காலத்தில் நடந்ததை ரீவைண்ட் செய்து பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. கட்சி, ஆட்சியை கட்டுக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவின் ஆணைக்கு அதிமுக அடிபணிந்தது.

ஆனால், தற்போது அதிமுக அம்மா அணியிலும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியிலும் ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்கிறார்கள். ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், வார்த்தைகளால் திடீர் தாக்குதல் நடத்துகிறார்கள். யார் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அணி தாவி பல்டி அடிப்பதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், கட்சி, ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முடிவு செய்து பகிரங்கமாக அறிவித்த நிலையில் இனி கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும்? யார் பொதுச் செயலாளர்? யார் அவைத்தலைவர் ? என்ற கேள்விகள் விடை காண வேண்டிய கேள்விகளாக உள்ளன.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

''இப்போது அதைப் பற்றி அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும்தான் பேச முடியும். ஏனெனில், ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி அணிகள் வெளிப்படையாக எதையும் பேச ஆரம்பிக்கவில்லை. அவர்களின் நிபந்தனைகள் குறித்தும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

ஆனால், யூகத்தின் படி சொல்ல வேண்டுமென்றால் ஓபிஎஸ் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆனவர், மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி 1989-ல் எம்.எல்.ஏ ஆனவர். சீனியாரிட்டி அடிப்படையில் ஓபிஎஸ் முதல்வர் ஆக வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்.

பொதுச் செயலாளர் தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரையில் தம்பிதுரைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். 1984-ம் ஆண்டிலேயே எம்.பி.ஆனவர், சாதிய சமன்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், சீனியர் என்கிற முறையிலும் தம்பிதுரை பொதுச் செயலாளர் ஆகலாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு முகாந்திரமாக இருந்து, சந்திப்புகளை உருவாக்கியதற்கு மூல காரணமாக இருந்தவர் தம்பிதுரை. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் உடனிருப்பது, இரு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வித்திடுவது என தம்பிதுரையின் பங்கு அவசியமாகிறது. மக்களவை துணை சபாநாயகராக இருந்துகொண்டு பொது பொறுப்பையும் எடுத்துக்கொண்டு செயல்படும் விதத்தில் தம்பிதுரை பொதுச் செயலாளர் ஆகலாம்.

அவைத் தலைவராக மதுசூதனன் இருக்கலாம். இதெல்லாமே யூகத்தின் அடிப்படையில்தான் சொல்கிறேன். அனுபவம் மிக்கவர்களாக இருந்தாலும் அதிமுகவில் ஆளுமை மிக்கவர்கள் வர வேண்டியது அவசியம். அப்படி வர முடியாது என்று சொல்லவில்லை. தேர்தல் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் அபிமானம் பெறுவது, கட்சியை தலைமையேற்று நடத்துவது, பிரச்சார வியூகம் வகுப்பது, வெற்றி பெறுவது என செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவுக்கு நடக்கும் முதல் சோதனையாக இருக்கும்.

ஆட்சியில், பதவியில் அமர்வதால் மட்டுமே ஆளுமை வந்துவிடுவதில்லை. தேர்தல் வெற்றியே ஆளுமையை வெளிப்படுத்தும். அதற்கு முன்னதாக இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும், கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதற்காக இரு அணிகள் இணைவது குறித்த சில உடன்பாடுகள் ஏற்படும்.

தினகரன் கட்சியிலிருந்து விலகி இருப்பதாக கண்ணியமாக கூறியுள்ளார். அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறவில்லை. எனவே, தினகரனும் பின்னாளில் அதிமுகவில் வரக் கூடும்.

உள்ளாட்சித் தேர்தலில் 12 மேயர்களை யார் சார்பில் யாரை நிறுத்துவது என்ற கேள்வி எழும்? அப்போதோ சில தருணங்களிலோ தனியாக இருந்திருந்தாலே நல்லது என்று கூட தோன்றியிருக்கும். ஆனால், பிரிந்திருப்பதால் பலன் இல்லை என்பதால்தான் இணைவதற்கு தயாராக உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.

கட்சியும், ஆட்சியும் ஓரிடத்தில் இருந்தாலே அதிகாரம் அதிகமாகிவிடும் என்பதற்காக அதைத் தவிர்க்கவும் வாய்ப்புகள் உள்ளன. எப்படிப் பார்த்தாலும் கட்சி, ஆட்சிக்கான அதிகாரப் போட்டியை எல்லா கட்சிகளும் சந்திக்கின்றன. எனவே, உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் பொறுத்தே அதிமுகவின் தலைமை, ஆளுமை யார் என்பது நிரூபணமாகும்'' என்றார் ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x