Published : 12 Nov 2013 07:48 AM Last Updated : 12 Nov 2013 07:48 AM
8-வது மாடியில் தற்கொலை மிரட்டல்: சென்ட்ரலில் ரயில்வே ஊழியர் கைது
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர், மண்ணெண்ணெய் கேனுடன் 8-வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். சென்னை சென்ட்ரலில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினரை 7 மணி நேரம் பாடாய்படுத்தியவர் இறுதியில் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர் லோகோ ரயில்வே பணிமனையில் வெல்டராக வேலை செய்பவர் தமிழரசு. இவர் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்துக்கு வந்தார்.
திடீரென கட்டிடத்தின் 8-வது மாடிக்கு சென்ற அவர், தற்கொலை செய்யப்போகிறேன் என்று கத்தினார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது. அது புறநகர் மின்சார ரயில் நிலையத்தின் நுழைவாயில் என்பதால் ஒரு நிமிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே மற்றும் பூக்கடை காவல் நிலையத்தினர் மைக் மூலம் தமிழரசுவிடம் பேசினர்.
'என்ன பிரச்சினையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உடனே கீழே இறங்கி வா' என கூறினர். அதற்கு தமிழரசு, ''அதிகமாக விடுமுறை எடுத்ததாகக் கூறி, என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும். என் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் வரும்வரை கீழே இறங்கி வர மாட்டேன்'' என்றார்.
இதையடுத்து, ரயில்வே மற்றும் பூக்கடை போலீஸார் 7 பேர் கட்டிடத்தில் ஏறி அவரைப் பிடிக்க முயன்றனர். ''யாராவது என் அருகே வந்தால் கீழே குதித்து விடுவேன்'' என்று தமிழரசு மிரட்டியதால் அவர்கள் நின்றுவிட்டனர். கீழ்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு லிப்ட் வாகனம் வரவழைக்கப்பட்டது. அந்த லிப்டை உயர்த்தினாலும் கீழே குதிப்பேன் என்றார் தமிழரசு.
உடனடியாக, பெரம்பூரில் வசிக்கும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர் 6 மாத கைக்குழந்தையுடன் வந்து கணவரை கீழே இறங்கச் சொல்லி கெஞ்சியும் தமிழரசு மறுத்துவிட்டார். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தால் மட்டுமே இறங்குவேன் என்று உறுதியாக கூறினார். மாலை 4 மணி ஆகியும் அவர் இறங்கி வரவில்லை.
இறுதியாக, 5 மணியளவில் பெரம்பூர் லோகோ ரயில்வே பணிமனை அதிகாரிகள் வந்து, தமிழரசுவை கீழே இறங்கும்படி கூறினர். அவர்களிடம், 'சஸ்பெண்டை ரத்து செய்ததற்கான உத்தரவில் நீங்கள் கையெழுத்து போட்டு என்னிடம் காட்டினால் மட்டுமே இறங்குவேன்' என்றார்.
உடனே உத்தரவை தயார் செய்து அதில் இரண்டு அதிகாரிகள் கையெழுத்து போட்டு காட்டினர். அதை அவரது மனைவியும் பார்த்து நிஜமாகவே கையெழுத்து போட்டு விட்டார்கள் என்று கூறினார். அதை அதிகாரிகள் மேலே கொண்டு சென்று அவரிடம் காட்டினர்.
உத்தரவை வாங்கிப் பார்த்து, அதை தனது பையில் வைத்துக் கொண்ட தமிழரசு, அதன் பிறகே சமாதானம் அடைந்து மாலை 5.45 மணிக்கு கீழே இறங்கி வந்தார். சிரித்துக் கொண்டே கீழே வந்தவரை, பூக்கடை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காலை 11 மணிக்கு மாடியில் ஏறி மிரட்டல் விடுத்த தமிழரசு, மாலை 5.45 மணி வரை ரயில்வே அதிகாரிகள், போலீஸார், தீயணைப்புப் படையினர், குடும்பத்தினர், பொதுமக்கள் என அனைவரையும் படாதபாடு படுத்திவிட்டார்.
தண்ணீர், பிஸ்கட்...
தமிழரசுவைப் பிடிப்பதற்காக போலீஸார் மாடிக்கு சென்றனர். மாடியின் கைப்பிடிச் சுவருக்கு வெளியே இருந்த மாடத்தில் அவர் நின்றிருந்ததால் அருகில் சென்றால் குதித்துவிடுவாரோ என போலீஸார் தயங்கினர். அதிகாரிகளும், போலீஸாரும் மாடிக்கு செல்வதும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுமாக இருந்தனர். இந்த பரபரப்புக்கிடையே தமிழரசுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்களை போலீஸார் கொடுத்தனர்.
WRITE A COMMENT