Published : 23 Sep 2013 03:54 PM
Last Updated : 23 Sep 2013 03:54 PM

நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை - தமிழக மருத்துவர்கள் வரவேற்பு

மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தமிழக மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.

மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணை, இரவு நேரப் பணிக்கு வந்த மருத்துவர் விஷால் வன்னே (29) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, வேண்டுமென்றே மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், விஷாலுக்கு, ஆயுள்தண்டனை விதித்து சனிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனையின் தலைவர் வி.கனகசபை கூறுகையில் மருத்துவர்களை கடவுளாக சாதாரண மக்கள் பார்க்கிறார்கள். தங்களின் அம்மா, தங்கை, மனைவி ஆகியோரை மருத்துவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

தனது கணவனிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத உடல் உபாதை விஷயங்களை மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மூலம் மருத்துவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறி ஆகிறது. இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் வேண்டும். இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்க விஷயம் என்றார்.

மருத்துவர்கள் தங்களின் படிப்பு முடிந்தவுடன் அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். இந்த சம்பவம் சமுதாயத்தில் பெண்களை போகப்பொருளாக பார்ப்பதன் வெளிப்பாடாகவே உள்ளது என்றார் பெண் மருத்துவர் ஆர். சாந்தி.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளுக்கு இது போன்ற மருத்துவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி தெரிவிக்கையில், சமுதாயத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே இந்திய தண்டனைச் சட்டம் 376 ல் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x