Published : 10 Feb 2017 11:15 AM
Last Updated : 10 Feb 2017 11:15 AM

காளைகளை அடக்கி சாதித்த பாலமேடு ஜல்லிக்கட்டு ஹீரோக்கள்: 2 பேர் புல்லட் மோட்டார் சைக்கிள்களை வென்றனர்

பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரருக்கும், யாராலும் அடக்க முடியாத காளையை அடக்கி தனது வீரத்தை நிரூபித்த வீரருக்கும் புல்லட் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவிழ்த்துவிடப்பட்ட 354 காளைகளை 1,465 வீரர்கள் அடக்கினர். நேற்றைய ஜல்லிக்கட்டில் பல காளைகளை யாராலும் அடக்க முடியாததால், பெரும்பாலான பரிசுகளை காளைகளே தட்டிச்சென்றன. இதுவரை பிடிபடாத காளைகள், பிரபலமான ஊர்களிலிருந்து வந்த காளைகள், பாரம்பரிய குடும்பத்தினர் வளர்த்துவரும் காளைகளை குறிவைத்து பிடிப்பதில் பல மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். சிறப்பு பரிசாக 2 புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை அறிவிக் கப்பட்டன.

மேலூர் அரிட்டா பட்டியைச் சேர்ந்த மாடுபிடிவீரர் கருப்பணன், பிடிபடாத காளைகள் என பெயர் பெற்ற சில காளைகள் உட்பட 9 காளைகளை அடக்கினார். மிக லாவகமாக, காளைகளை அதன் போக்கிலேயே விட்டு மடக்கி பிடித்த இவரது பாணியை பார்வையாளர்கள் மிகவும் ரசித்தனர். கருப்பணன் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்டதுடன், இவருக்கு சிறப்பு பரிசான புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

இதேபோல், வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை ஒன்றை எந்த மாடுபிடி வீரரும் தொட முடியவில்லை. மேலும் அந்த காளை 2 நிமிடத்துக்கும் மேல் வாடிவாசல் அருகிலேயே நின்று விளையாடியது. இந்த காளையை நெருங்க முடியாமல் வீரர்கள் தவித்தனர். அப்போது, ஒலிபெருக்கியில் பேசிய விழாக்குழு பிரமுகர், ‘இதுதாண்டா சூப்பர் காளை. இந்த காளையை அடக்கி வீரத்தை காட்டும் வீரருக்கு சிறப்பு பரிசான மற்றொரு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த சில வீரர்கள் காளையை நெருங்க முயன்றும் தோற்றனர். அப்போது, விராட்டிபத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அன்புசிவா திடீரென காளையின் திமிலை பிடித்தார். அவரை தூக்கி வீசி பந்தாட காளை எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

முடிவில், அன்புசிவா புல்லட் மோட்டார் சைக்கிளை வென்று, பார்வை யாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றார். 7 காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர் சிவக்குமார் மோட்டார் சைக்கிளை வென்றார். இவர்களுடன் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு பெற்ற செந்தில், பிரபாகரன், சிலம்பரசன் ஆகியோருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்தார்.

இதேபோல், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி.ராஜசேகர், சிக்கந்தர்சாவடி அன்பு, பூதகுடி அய்யாத்துரை, கருப்பாயூரணி செல்வம், உத்தங்குடி கருப்பசாமி ஆகியோர் பிடிபடாத மற்றும் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கான பரிசுகளை வென்றனர்.

கடந்த 2014-ல் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 452 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தற்போது 354 காளைகள் பங்கேற்றாலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் அளித்து நிதானமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x