Published : 11 Nov 2015 08:18 AM
Last Updated : 11 Nov 2015 08:18 AM

கடலூரில் மழை பலி 27 ஆனது; 35,000 ஏக்கர் பயிர்கள் சேதம்

கடலூரில் கனமழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 35,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வாழை, முந்திரி உட்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீராணம் ஏரியில் 2,000 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டதால், திருநாரையூர், சருவராஜன்பேட்டை, எல்லேரி கிழக்கு, கீழ வன்னியூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

கடலூரில் பலி எண்ணிக்கை 27-ஆக அதிகரிப்பு:

மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. கல்குணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உட்பட 3 பேரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

பன்ருட்டியை அடுத்து பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 11 பேர், விசூர் அருகே 3 பேர், குறிஞ்சிப்பாடியில் 8 பேர் இதுதவிர பிற பகுதிகளில் 5 என மொத்த, 27 பேர் உயிரிழந்தனர்

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பூதம்பாடி, கல்குணம் கிராமங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 53 கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 102 கிராமங்கள் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்த்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் மீனவ கிராம மக்கள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களது படகுகளைக் காணவில்லை என புகார் தெரிவித்ததையடுத்து படகுகளை மீட்கும் பணியில் கடலோர காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2005, 2010-ம் ஆண்டுகளுக்குப் பிறகு பரவனாறு அணை 3-வது முறையாக உடைந்துள்ளது. வாலாஜா ஏரியிலிருந்து வினாடிக்கு 8000 கன அடி அளவுக்கு பரவனாறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் - வடலூர் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ஏக்கர் சம்பா பயிர் சேதம்:

கடலூர், பன்ருட்டி ஆகிய பகுதிகளில் 20,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டா சம்பா பயிரும் சேதமடைந்துள்ளது.

13 குழுக்கள் அமைப்பு:

கடலூர் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககந்தீப் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு:

கடலூர் - சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்திலிருந்து கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை வரவேண்டிய பேருந்துகள் கம்மாபுரம், விருத்தாச்சலம் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகின்றன. அதுவும் ஒருசில பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

மின்சாரம் துண்டிப்பு:

கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் கடலூர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமங்களில் மின்சார விநியோகத்தை சீர் செய்யும் பணியை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

வரலாறு காணாத மழை:

கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியில் 48 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யக்கூடிய சராசரி மழை அளவு, ஒரே நாளில் பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

நிலக்கரிச் சுரங்கத்துக்குள் வெள்ளம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் மூன்று சுரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பாதிப்பு:

நெய்வேலியில் நாள் ஒன்றுக்கு 2990 மெ.வா மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால், சுரங்கங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 241 மெ.வா மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

35 மருத்துவக் குழுக்கள்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவமழையினால் கனமழை பெய்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளினால் பொது மக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி, மாத்திரைகள் வழங்குவதற்கு ஏதுவாக கடலூர் மாவட்டத்தில் 35 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட நபா;கள் பயனடைந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

20,000 உணவுப் பொட்டலங்கள்:

கடலூர் மாவட்டத்தில் வடகிழககு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறம், கிராமப்புரம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முதல்வர் தலைமையில் ஆலோசனை:

வடகிழக்கு பருவமழை நிலவரம் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், உதயகுமர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x