Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM
சென்னை பெருநகர முக்கிய சாலைகளில் பயணிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனதை குடைந்து வரும் கேள்வி, ஆங்காங்கே சாலையின் ஒரு பகுதியை இரும்புத் தகடுகளால் தடுத்து, மெட்ரோ ரயில் பணியாளர்கள் அப்படி என்னதான் வேலை செய்கிறார்களோ என்பதுதான்.
மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து கிடைக்கும் சிறிது இடத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் முண்டியடித்து ஊர்ந்து செல்லும் அவஸ்தை பலருக்கும் உண்டு. இரும்புத் தடுப்புக்கு அந்தப்பக்கம் என்ன நடக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் அசந்துபோவீர்கள். அந்த அளவுக்கு ஓர் பொறியியல் அதிசயம் சென்னை சாலைகளில் நிகழ்ந்து வருகிறது.
மாலை மயங்கும் நேரத்தில் அனைவரும் அலுவலகங்களிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் நேரு பார்க் பகுதியில் மட்டும் சுறுசுறுப்பாக பணிகள் நடக்கத் தொடங்குகிறது. அங்கு நிலத்திற்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதையை அமைக்க சீனாவில் இருந்து 2 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் (டன்னல் போரிங் மெஷின்) கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் வரவழைக்கப்பட்டது. நேரு பார்க்கில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை 950 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையை தோண்ட 18 மாதங்கள் ஆகியுள்ளன.
சுரங்கப் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் பணி இரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஸ்டேஷன் செல்ல நான்கு புறங்களில் (கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம், சங்கம் திரையரங்க வளாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆர்ய வைத்தியசாலை) பாதை அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மட்டுமல்ல. அப்பகுதியில் சாலையை கடந்து செல்வோரும், இந்த ஸ்டேஷனை சுரங்க நடைபாதையாக பயன்படுத்த முடியும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு சுரங்கப் பாதையை அமைக்கும் பணியில் 150 இந்தியத் தொழிலாளர்களும், 70 சீனத் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பணிபுரிந்து வரும் சீனாவின் ஷாங்காய் பகுதியைச் சேர்ந்த சுரங்கப் பாதை வல்லுநரான ஹு ஹா பின் கூறுகையில், “இத்துறையில் எனக்கு 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இதற்கு முன்பு சிங்கப்பூரிலும், ஹாங்காங்கிலும் பணிபுரிந்துள்ளேன். அந்த நகரங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை மாநகரின் மண் மிகவும் கடினமாக உள்ளது. இங்கு சுரங்கப் பாதையை அமைக்கும் பணி, சவாலானதாக உள்ளது” என்றார்.
இந்த சுரங்கப்பாதைக்குள் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து, 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைதான் நிலவுகிறது. சுரங்கத்தினுள் தண்டவாளப் பாதையை அமைக்கும் பணிகள் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும். ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்திலும் குறுக்கே செல்வதற்கான பாதைகள் அமைக்கப்படவுள்ளன. அதோடு, தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து செல்வதற்கான பாதையும் அமைக்கப்படுகிறது.
சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் முடிவடைந்துவிட்டதால் எழும்பூர் பகுதியில் உள்ள இயந்திரத்தை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் இந்த இயந்திரத்தைக் கொண்டு பச்சையப்பா கல்லூரியிலிருந்து செனாய் நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.
மற்றொரு இயந்திரம் பச்சையப்பா கல்லூரியிலிருந்து நேரு பார்க் வரை சுரங்கப் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைப் பணிகளின் கண்காணிப்பாளர், பிஹாரின் மக்தம்பூரைச் சேர்ந்த முகமது பயஸ் கரீம், இதற்கு முன் டெல்லி, துபாய், சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார். அவர் கூறுகையில், “இங்கு பணிபுரிவது அருமையான அனுபவமாக இருக்கிறது. எங்களின் பணிகளுக்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT