Published : 15 Jun 2017 08:49 AM
Last Updated : 15 Jun 2017 08:49 AM
செல்போன் மற்றும் கண்காணிப்பு கேமராவை வைத்து குற்றவாளி களை கைது செய்த போலீஸார், 80 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பெரும் சவாலான வழக்கை 2 மாதங்களில் விரைந்து முடித்துள்ளனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சரவணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். மென்பொருள் பொறியாளர். கடந்த ஏப்ரல் மாதம் கார்த்திகேயன், குடும்பத்துடன் வெளியூர் சென்றார். அந்த நேரத்தில், அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்து 80 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். மேலும், தடயம் எதுவும் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு சென்றனர். அனைத்து தடயமும் அழிக்கப்பட்டு இருந்ததால், சேலையூர் போலீஸார், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரிக்க தொடங்கிய தனிப்படை போலீஸார், கார்த்திகேயன் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர், அந்த பகுதி யில் அதிகமாக சுற்றி வந்த வாகனங் களையும், அவை யாருக்கு சொந்த மானவை எனவும் விசாரித்தனர்.
அதில், ஒரு கார் சம்பந்தம் இல்லாமல் அந்த பகுதி முழுவதும் இரவு - பகலாக வலம் வந்துள்ளது தெரியவந்தது. குறிப்பாக முகப்பு விளக்கை போடாமல் இருந்ததால், சந்தேகம் வலுத்தது. எனவே கார் பதிவு எண் குறித்து விசாரிக்க தொடங்கினர். இதற்கிடையில், மேற்கண்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட நாளில் எந்தெந்த எண்களுக்கு அழைப்பு சென்றது, வந்தது என ஆராய்ந்தனர். அதில், கிடைத்த தகவலின்படி சென்னை கொளத்தூரை சேர்ந்த வினோத்குமார் (27) டேவிட் (29), பாலாஜி (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரும் சவால் நிறைந்த இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது குறித்து போலீஸார் ஒருவர் கூறியதாவது:
80 பவுன் திருடப்பட்ட வழக்கு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு தீவிர விசாரணையில் இறங்கினோம். பல நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை. சோர்ந்து போகாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டோம். அப்போது கொள்ளை நடப்பதற்கு முன் கார் ஒன்று வந்து சென்றது என தகவல் கிடைத்தது. அதனை முக்கிய தகவலாக பயன்படுத்தி விசாரணையில் இறங்கினோம். கொள்ளை நடந்த அன்றும் அதற்கு முன்பும் கொள்ளை நடந்த வீட்டை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் சாலையோரம் மற்றும் குடியிருப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
அதேபோல் அந்த பகுதியில் குறிப்பிட்ட நாளில் எந்தெந்த செல்போன்களுக்கு அழைப்புகள் சென்றன, வந்தன என்ற விவரங்களை சேகரித்தோம். மேலும் கேமரா காட்சிகளில் ஒரு கார் மட்டும் இரவில் விளக்கு போடாமல் சுற்றி வந்தது தெரிந்தது. இந்த காரின் பதிவு எண்ணை ஆராய்ந்து விவரங்களை சேகரித்தோம். மேலும், கொள்ளை நடந்த வீட்டை சுற்றி அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பர்களை வைத்து ஆய்வு செய்தோம். அதன் பிறகு கிடைத்த அனைத்து ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை உறுதி செய்து கைது செய்தோம் என்றார்.
துப்பு இல்லாமல் சிறந்த முறையில் புலனாய்வு செய்து நகையை மீட்ட தனிப்படை போலீஸாரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT