Last Updated : 04 Aug, 2016 10:03 AM

 

Published : 04 Aug 2016 10:03 AM
Last Updated : 04 Aug 2016 10:03 AM

பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்புப் படை: போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 26 ஆண்டுகளாக தொடரும் காக்கிச்சட்டை புலவரின் பணி

தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து, சாலை பாதுகாப்புப் படைகளை உருவாக்கி வருகிறார், என்.ஜட்சன் என்ற காக்கிச்சட்டை புலவர்.

நகரங்களில் போக்குவரத்து போலீஸாருக்கு உதவவும், சிக்னல் விளக்குகளை இயக்கவும், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் சாலைகளை மாணவர் கள் கடக்க உதவவும், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தவும் பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப் புப்படை உருவாக்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படையைப் போன்று காவல்துறை போக்கு வரத்து காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் கல்வி நிலையங்களில் சாலை பாதுகாப்புப் படை உருவாக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வி யாண்டின் தொடக்க மாதங்களில் போக்குவரத்து காப்பாளர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று சாலை பாதுகாப்புப் படைக்கு மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். முழுக்க முழுக்க சேவையாக இந்தப் பணியை செய்ய வேண்டும்.

இதனால் பலர், காப்பாளர் பணிக்கு வருவதில்லை. மேலும், பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்புப் படைகளும் உருவாக் கப்படவில்லை. இதுகுறித்த போதிய விழிப்புணர்வு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இல்லாத நிலையில் கடந்த 26 ஆண்டுகளாக சாலை பாதுகாப்புப் படைகளை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த என்.ஜட்சன்(62).

அடிப்படையில் இசையமைப் பாளரான இவர், கடந்த சில நாட் களாக பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில் சாலை பாது காப்புப் படையில் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து உரையாற்றி முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் ஆர்வம் மிக்க மாணவர்களை சாலை பாதுகாப்புப் படைக்கு சேர்க்கிறார்.

அவ்வாறு சேர்க்கப்பட்ட மாண வர்களுக்கு முக்கிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் காலை, மாலை வேளைகளில் இவர்கள் அந்தந்த பள்ளிகள் முன் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படு கிறார்கள்.

அங்கீகரிக்க வேண்டும்

ஜட்சன் கூறும்போது, “பல பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து பேசும்போது மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது. 8, 9-ம் வகுப்பு மாணவர்கள்கூட இருசக்கர வாகனங்களை ஓட்டு கின்றனர். சட்ட விதிகளை மீறி 18 வயதுக்கும் குறைவானவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது என்பதை அவர்கள் மத்தியில் விளக்கிக் கூறி உறுதிமொழியும் எடுக்க வைக்கிறேன். சாலை பாதுகாப்புப் படையில் சேரும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தன்னலம் கருதாமல் மேற்கொள்ளும் இச்சேவையை அரசும் அங்கீகரிக்க வேண்டும். என்எஸ்எஸ், என்சிசி போன்ற வற்றில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளின் போது மதிப்பெண் அளிக்கப்படுகி றது. அதுபோல சாலை பாது காப்புப் படையில் சேரும் மாணவர் களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படையினருக்கு தினமும் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது. ஆனால் அதே பணியில் ஈடுபடும் மாணவ, மாணவியருக்கு எதுவுமே வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்தால் சாலை பாதுகாப்புப் படையில் மாண வர்கள் ஈடுபடுவது அதிகரிக்கும். விபத்துகளும் குறையும்” என்றார்.

தேசிய விருது பெற்றவர்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஜட்சன், 2003-ம் ஆண்டில் தேசிய விருது பெற்றிருக்கிறார். தற்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய ஆல்பம் தயாரிப்புப் பணிகளை தொடங்கி இருக்கிறார். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கவிதைகளையும், விழிப்புணர்வு வாசகங்களையும் உருவாக்கி இருக்கிறார். இதனால் இவரை ‘காக்கிச்சட்டை புலவர்’ என்று அழைக்கிறார்கள்.

விழிப்புணர்வு வாசகங்கள்

ஜட்சன் உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள்:

‘சாலை விதிகளை காதில் போட்டா, எமனுக்கே காட்டலாம் டாட்டா’, ‘சாலையைப் பார்த்து ஓட்டினால் சமத்து, சேலையைப் பார்த்து ஓட்டினால் விபத்து’, ‘மனிதர்களுக்குத்தான் சாலை, மிருகங்களுக்கு அங்கென்ன வேலை?’, ‘சாலைகளில் குழிகள், சாவுக்கான வழிகள்.’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x