Published : 01 Jul 2016 10:42 AM
Last Updated : 01 Jul 2016 10:42 AM
போலியோவால் தனது 2 வயதில் இரண்டு கால்களையும் இழந்த, வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45), நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கைகளாலேயே செய்து காண் போரை பிரமிக்க வைக்கிறார். முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முதுநிலை அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டு வந்தாலும், மேலும் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ரவி போராடி வருகிறார். இதை வலி யுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கார் மூலம் விழிப் புணர்வுப் பயணம் மேற் கொண்டார் ரவி, இதில், கார் ஓட்ட பயன்படுத்தப்படும் முக்கிய அம்சங்களான கியர், கிளட்ச், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை 2 கைகளால் இயக்கும் வகை யில் இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் களுக்கு மதிப்புக் கூட்டு வரியை அரசு நீக்க வேண்டும். நெடுஞ் சாலைகளில் பயணிக்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தனது சுற் றுப்பயணத்தில் அவர் வலியுறுத்தி னார்.
இதையடுத்து, மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய ரவியின் தொடர் முயற்சியால், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணமில்லா சிறப்புச் சலுகையை இவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
விபத்து காப்பீட்டை உயர்த்த வேண்டும்
ரவி மேலும் கூறியதாவது: ‘‘பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை நீக்க வேண்டும். விபத்து காப்பீட்டுத் தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வழியே பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
இந்நிலையில், சுங்கக் கட்டணத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT