Published : 23 Sep 2013 03:41 PM
Last Updated : 23 Sep 2013 03:41 PM
புரட்டாசி மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக மீன் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
'புரட்டாசி மாதம் பிறக்கும் முன்பே, இந்த வாரம் அசைவ உணவுகளை ஆசை தீர சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் புரட்டாசி மாதம் பிறந்ததும், நம் வீட்டில் அசைவ உணவு வகைகள் எதுவும் கிடையாது' என்று பெரியவர்கள் கூறுவதை பார்த்திருக்கிறோம்.
புரட்டாசி மாதம் ஆன்மிக நம்பிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாதமாக இருப்பதால்தான் இந்த மாதத்தில் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். அதனால், மீன், இறைச்சி ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மீன் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
மீன் விற்பனையைப் பொருத்தவரை புரட்டாசி மாதம், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் கார்த்திகை மாதத்தில் விற்பனை பெருமளவு குறையும். சென்னையில் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிபேட்டை, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் மீன் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நடைபெறுகிறது. இந்த மார்கெட்டுகளுக்கு பல நூற்றுக்கணக்கான டன் மீன் வரத்து உண்டு. இந்த ஆண்டு, மங்களூர், நெல்லூர், விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்ததால், அங்கிருந்து சென்னைக்கு மீன் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது. அதனால் புரட்டாசி மாதமாக இருந்தபோதிலும் மீன் விலை அவ்வளவாகக் குறையவில்லை. பல மீன்களின் விலை உயர்ந்திருப்பதையும் அறிய முடிந்தது.
உதாரணத்துக்கு கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.40-க்கு விற்றது. ஆனால், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.100-க்கு விற்பனையானது. சிறிய மார்க்கெட்டுகளில் இன்னும் சற்று அதிகம்.
சென்னைவாசிகள் விரும்பிச் சாப்பிடும் சிறிய வஞ்சிரம், பெரிய வஞ்சிரம், வௌவால், வளர்ப்பு இறால், கடல் இறால்களின் விலை, வரத்து குறைவு காரணமாக கடந்த ஆண்டைவிட அதிக விலைக்கே விற்கப்பட்டது. இப்போது மீ்ன் விலை அதிகரிப்புக்கு டீசல் விலை உயர்வும் முக்கியக் காரணம் என்று சிந்தாதிரிப்பேட்டையில் நீண்டகாலமாக மீன் விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர் கூறினார்.
ஆட்டிறைச்சி – கோழிக்கறி
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் புராட்டாசி மாதத்தில் ஆட்டிறைச்சி மொத்த விலை குறைவுதான். நாங்கள் ஐதராபாத்தில் டீலர்களிடம் ஆடுகளை வாங்கி வரும்போது ஆகும் செலவை ஒப்பிடுகையில், ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.360-க்கு விற்க வேண்டும். ஆனால் ரூ.300-க்குத்தான் விற்கப்படுகிறது. அதேநேரத்தில் சில்லறை விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை. ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.380 முதல் ரூ.440 வரை விற்கிறது என்கிறார் ஓர் ஆட்டிறைச்சி வியாபாரி.
கோழி மொத்த விலையைப் பொருத்தவரை, ஒரு கிலோ பிராய்லர் கோழி (உயிரோடு) ரூ.65. சில்லறை விலை (உயிரோடு) ரூ.90. அதுவே கோழி இறைச்சியாக வாங்கினால் ரூ.140 எனவும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.225-க்கும் விற்பனையானது என்கிறார்கள் பெரம்பூரைச் சேர்ந்த சிக்கன் வியாபாரிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT