Published : 30 Mar 2014 11:16 AM
Last Updated : 30 Mar 2014 11:16 AM

நீதிமன்றங்கள் வீடுபோல செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

“நீதிமன்றங்கள் வீடுபோல செயல் பட வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) சதீஷ் கே. அக்னி ஹோத்ரி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் குடும்பநல நீதிமன்றம் மற்றும் சமரசத் தீர்வு மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், நீதிமன்றத்தை திறந்துவைத்து தலைமை நீதிபதி (பொ) சதீஷ் கே. அக்னி ஹோத்ரி பேசியது:சமரசத் தீர்வு மையங்கள் மூலம் மனுதாரர்களின் காலம், பணம் மிச்சப்படுவதோடு உடனுக்குடன் நீதி கிடைக்க உதவுகிறது. வெளிநாடுகளில் 94 சதவீத வழக்குகள் சமரசத் தீர்வு மூலம் முடிக்கப்படுகின்றன. இந்தியாவில் 15 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே சமரசத் தீர்வு காணப்படுகிறது.

அதனால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைகின்றன. விவாகரத்து கோரி வரும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், குடும்ப நல நீதி மன்றங்கள் கணவன், மனைவியை முடிந்தளவு சேர்த்து வைக்கவே முயற்சிக்க வேண்டும்.சமரசத் தீர்வு மையங்கள், வழக்கமான நீதிமன்றங் களை போலச் செயல்படக் கூடாது. மனுதாரர்கள், வழக்கு சம்பந்தமான தகவல்களை கூச்சமில்லாமல், அச்சமில்லாமல் சொல்லக்கூடிய வீடு போன்று செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் ஒரு குழந்தைகூட, தனது உரிமையைக் காக்க நீதிமன்றத்தை நாடலாம். எதிர்காலத்தில் இந்தியாவிலும் படிக்க வைக்காவிட்டால், பெற்றோர் மீது குழந்தைகளே வழக்கு தொடரும் காலம் வரலாம். அந்த வழக்குகளுக்கு தீர்வுகாண, இந்த சமரசத் தீர்வுமையங்கள் மிகுந்த உதவியாக இருக்கும் என்றார்.

பொறியாளரிடம் கிடுக்கிபிடி

புதிய கட்டிடங்களைப் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, பொறியாளரை அழைத்து, “மற்ற ஊர்களில் உள்ள கட்டிடங்களை ஒப்பிடும்போது, இந்த கட்டிடம் தரமாக இல்லையே, கட்டிட அளவும் குறைவாக இருக்கிறதே, கட்டிடத்தின் மொத்த அளவு, திட்ட மதிப்பீடு எவ்வளவு? எவ்வளவு தொகை மீதமுள்ளது? என அடுத்தடுத்து ‘கிடுக்கி’பிடி கேள்விகளைக் கேட்டார்.

பதற்றமடைந்த பொறியாளர், ஒரு கேள்விக்குக்கூட பதில்கூற முடியாமல் தடுமாறினார். உடனே நீதிபதி, கட்டிடத்துக்கான செலவு விவரங்களை எனது கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் என பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x